பத்தாம் வகுப்பில் ஃபெயிலான மகன் - கேக் வெட்டி கொண்டாடி தீர்த்த பெற்றோர்!
கர்நாடகா மாநிலத்தில் அண்மையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன் அடிப்படையில் இந்தாண்டு அம்மாநிலத்தில் 66.14% பள்ளி மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். இதில் பாகல்கோட் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் அபிஷேக் 10ஆம் வகுப்பில் 625 மதிப்பெண்களுக்கு 200 மதிப்பெண்கள் எடுத்து அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் அந்த மாணவரின் பெற்றோர் அவரது தோல்விக்கு கேக் வெட்டி கொண்டாடி அக்கம்பக்கத்தினருக்கும் அதைக் கொடுத்தது, சமூக வலைத்தள பயனர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த மாணவரின் பெற்றோர், எங்கள் பையனின் முயற்சி தேர்வு முடிவில் பிரதிபலிக்கவில்லை. ஆனால், நேர்மையாக அதை எதிர்கொண்டான். அதனால் தான் கொண்டாடுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் கேக் வெட்டி கொண்டாடியது தங்கள் பையனுக்கு மன உளைச்சலில் இருந்து வெளியேறி அடுத்த முறை தைரியமாக தேர்வெழுத ஊக்கம் அளிக்கும் வகையில் அமையும் என்று கூறியுள்ளனர். அதே போல் அந்த மாணவர், “அடுத்த முயற்சியில் நான் அனைத்து பாடங்களிலும் கண்டிப்பாக தேர்ச்சி பெறுவேன்” என்று கூறியுள்ளார்.