சொத்துக்காக மகன், மருமகள் கொடுமை - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி!
தனது பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக மகன் மற்றும் மருமகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரா. இவர்
தனது கணவர் முத்துசாமி இறந்த நிலையில் தனது மகன் சுரேஷ்குமார் மற்றும் மருமகள் ரூபினி ஆகியோருடன் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மூதாட்டியின் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதையும் படியுங்கள்: குன்னூர் அருகே பள்ளியை சேதப்படுத்திய யானைகள் – கடும் பனிமூட்டத்தால் விரட்டுவதில் சிக்கல்!
விசாரணையில், கடந்த 6 மாத காலமாக மகன் சுரேஷ்குமார் மற்றும் மருமகள் ரூபினி தனது பெயரில் உள்ள ரூ.15 லட்சம் மதிப்புள்ள 8 சென்ட் நிலத்தை அபகரிப்பதற்காக பத்திரத்தில் கையெழுத்து போட வற்புறுத்தி மிரட்டல் விடுத்து வருவதாகவும், தன்னை கொடுமைபடுத்தியும் வருவதாகவும் மூதாட்டி புகார் தெரிவித்தார்.
இது குறித்து ஏற்கனவே காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து தன்னை துன்புறுத்தி வருவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.