தூத்துக்குடியில் தந்தையை கொலை செய்த மகன் கைது - சிப்காட் போலீசார் விசாரணை!
தூத்துக்குடி மாவட்டம், பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ஜெபமாலை என்பவரது மகன் ராஜ் (56). மீன்பிடித் தொழில் செய்து வந்த ராஜ் மகிழ்ச்சிபுரம் மேற்கு பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இதில் 2வது மகன் ஜேம்ஸ் (33) தூத்துக்குடி அண்ணாநகர் 6வது தெருவில் தனது மனைவியுடன் வசித்து வரும் நிலையில் அடிக்கடி மதுபோதையில் பெற்றோரிடம் பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது பெற்றோர்கள் 1ம் கேட் பகுதியில் தனியான வசித்து வந்துள்ளனர். ஆனால் ஜேம்ஸ் அங்கும் சென்று பிரச்னை செய்ததால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மகிழ்ச்சிபுரத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகிழ்ச்சி புரம் சென்ற ஜேம்ஸ் தனது மனைவியிடம் தவறான
எண்ணத்துடன் பேசினாயா? என்று தந்தையிடம் தகராறு செய்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தந்தை ராஜை வழிமறித்த ஜேம்ஸ் தகராறு செய்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரின் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் உயிரிழந்த ராஜ் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் ஜேம்ஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.