Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“வயநாட்டில் மறக்கமுடியாத நாளின் சில நினைவுகள்” - சர்ச்சையில் சிக்கிய சசி தரூரின் பதிவு..

01:51 PM Aug 04, 2024 IST | Web Editor
Advertisement

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய காங்கிரஸ் எம்.பி  சசி தரூர் அதனை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட நிலையில், இணையவாசிகள் பலரும் அதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.

இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தொடர்ந்து 6-வது நாளாக மீட்பு படையினர் முழு வீச்சில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தற்போதுவரை 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.  360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில் திருவனந்தபுரத்தின் காங்கிரஸ் எம்.பி-யான சசி தரூர் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக நேற்று வயநாட்டுக்கு சென்றிருந்தார். அவர் அங்குள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களாக பாய், தலையணை மற்றும் போர்வை போன்றவற்றை வழங்கினார்.

தொடர்ந்து, வயநாட்டிற்கு சென்றது முதல் பாதிப்படைந்தவர்களைச் சந்தித்தது வரையில் வீடியோ எடுத்து, அதனை அவர் `வயநாட்டில் மறக்கமுடியாத நாளின் சில நினைவுகள்’ என்ற தலைப்பில் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், சசி தரூரின் எக்ஸ் தள பதிவுக்கு பலரும் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சசி தரூரின் பதிவுக்கு கருத்து தெரிவித்த எக்ஸ் தள பயனர் ஒருவர், “உயிரிழப்புகளும் சோகங்களும் நிலவுகிற பகுதியில், மறக்கமுடியாத நினைவுகள் என்று குறிப்பிடுவது கண்டிக்கத்தக்கது’’ என்று தெரிவித்திருந்தார். மற்றொருவர், ”சோகத்தால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு ஒரு மறக்கமுடியாத நாளைக் கொண்டாடச் சென்றாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு நபர் ”உண்மையில் உதவுவதைவிட அதைப் பற்றி இடுகையிடுவதுதான் மிகவும் முக்கியமானது. தன்னலமற்ற சேவையை விட செல்ஃபிக்களுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார். தன்னுடைய எக்ஸ் பதிவு சர்ச்சையானதையடுத்து சசி தரூர் ”மறக்கமுடியாதது என்பது நினைவில் கொள்ளத்தக்கது அல்லது நினைவில் கொள்ளக்கூடிய ஒன்று என்ற பொருளில்தான் சொன்னேன்" என்று பதிலளித்தார்.

Tags :
CongressKeralaKerala Landslidesshashi tharoorWayanad Landslides
Advertisement
Next Article