கோடை காலத்திற்கு ஏற்ற சில உணவுகள்!
கோடை காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவுகளை இங்கு பார்க்கலாம்.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது. இதனால் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அந்த வகையில், கோடை காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவுகளை இங்கு பார்க்கலாம்.
மோர்
மோர் கோடைகால சிறந்த பானமாக பார்க்கப்படுகிறது. மோர் நம்முடைய தாகத்திற்கு உகந்த பானமாக இருக்கும். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் செரிமானத்தை மேம்படுத்துவதுடன் குடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருகிறது. மேலும் மோரில் புரதம், கால்சியம், விட்டமின் பி12, ரிபோஃபிளேவின் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன.
மோர் நம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது. மோரில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நம் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. குறைந்த கலோரி கொண்ட மோர் அருந்துவதால் நம் உடல் எடை குறையும்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, முலாம்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். சாராகவும் பருகலாம். இதன் மூலம் வெயிலினால் ஏற்படும் சோர்வு நீங்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் அதிக நார்ச்சத்து கொண்டதுடன், செரிமானத்திற்கு உதவும். கோடையில் அசிடிட்டி இல்லாமல் இருக்க அதிக பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுவது நல்லது.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. வெள்ளரிக்காய் கோடைகால சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. வெள்ளரிக்காய் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. மேலும், எடையை குறைப்பதற்கும், செரிமானத்திற்கு உதவுகிறது. கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது. இயற்கையாகவே அதிகளவான தண்ணீரைக் கொண்ட வெள்ளரிக்காய், மனித உடலின் திரவ உட்கொள்ளலை அதிகரிப்பதோடு உடலை குளிர்ச்சியாக்குகிறது.
தர்பூசணி
தர்பூசணியில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவை அதிகம் உள்ளன. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய நீர் பற்றாக்குறை உடனே தீரும். தர்பூசணியில் 92% நீர்ச்சத்து உள்ளது.
எலுமிச்சை
எலுமிச்சையில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. கோடையில் வியர்வை மூலம் இழக்கப்படும் எலக்ட்ரோலைட்டுகளை ஈடுகட்ட எலுமிச்சை உதவுகிறது. மேலும், கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
இளநீர்
இதில் சோடியம், கால்சியம், குளுகோஸ், புரதம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இளநீர் தாகத்தைப் போக்கிப் புத்துணர்ச்சியை அளிக்கும். இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன.
இதன் மூலம் இளநீர் உடல் சூட்டைத் தணித்துக் குளிர்ச்சியைத் தரும். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்ப நிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன.
இதனுடன் மாதுளம், சப்போட்டா, ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை பிழிந்தோ அல்லது பழமாகவோ சாப்பிடுவது நல்லது. கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும் என்பதால் பசலை கீரை கொண்டு சாலட் செய்து அடிக்கடி சாப்பிடலாம். தொடர்ந்து கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், கோடை காலத்தில் உப்பு, எண்ணெய், காரம், புளிப்பு அதிகம் சேர்த்த உணவு வகைகளை தவிர்க்கலாம்.