For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சர்ச்சையை கிளப்பிய ‘Pure Veg Fleet': திரும்பப் பெற்றது சொமேட்டோ!

12:33 PM Mar 20, 2024 IST | Web Editor
சர்ச்சையை கிளப்பிய ‘pure veg fleet   திரும்பப் பெற்றது சொமேட்டோ
Advertisement

சைவ உணவு விரும்பிகளுக்காக அறிவிக்கப்பட்ட பச்சை நிற உடைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில்,  ஆடைக் கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதாக சொமேட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

உணவு விநியோகிப்பதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சொமாட்டோ, சைவ உணவு பிரியர்களை கவரும் வகையில் சைவ உணவுகளை ஆர்டர் செய்பவர்களுக்கு, சைவ உணவுகளை மட்டுமே விநியோகிக்கும் பணியாளர்கள் மற்றும் உணவுப் பைகளை பயன்படுத்த முடிவு செய்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இந்த தனித்துவ ஊழியர்கள் வழக்கமான சிகப்பு நிறத்திலான ஆடை மற்றும் பைக்கு பதிலாக, பச்சை நிறை டி ஷர்ட் மற்றும் பையை பயன்படுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சொமாட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் வெளியிட்ட பதிவு ஒன்றில், “உலகில் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். அவர்கள் தங்கள் உணவை எப்படி சமைக்கிறார்கள் மற்றும் அந்த உணவை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். எனவே அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘ப்யூர் வெஜ் மோட்’ வசதி சொமாட்டோவில் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சைவ உணவுக்கான பிரத்யேக வசதி சைவ உணவு விடுதிகள் மற்றும் சைவ உணவாளர்களை இணைக்கும் இடங்களில் மட்டும் முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்படுவதாகவும், பின்னர் படிப்படியாக நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக, 'ஒரு அசைவ ரக உணவு கூட, எங்களின் பச்சை உணவுப் பெட்டிக்குள் செல்லாது’ என சொமாட்டோ உறுதி அளித்தது.

ஆனால்,  சமூகவலைதளங்களில் பச்சை நிற உடையுடனான சுத்த சைவ சேவைக்கு கடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பின.  சில நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், பலரும் தாங்கள் சொமேட்டோ ஆப்பை தங்கள் கைப்பேசியில் இருந்து நீக்கி அதனை ஸ்க்ரீன்ஷாட் செய்து சமூகவலை தளங்களில் பகிரத் தொடங்கினர்.

இந்நிலையில் சைவ உணவு விரும்பிகளுக்காக அறிவிக்கப்பட்ட பச்சை நிற உடையுடனான சுத்த சைவ சேவைக்கான பச்சை உடை பிரிவை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபீந்தர் கோயல் இன்று (மார்ச் 20) தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில்,

“சுத்த சைவ உணவு விரும்பிகளுக்காக பிரத்யேக பிரதிநிதிகளை நாங்கள் பயன்படுத்தும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.  ஆனால்,  அவர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு வாபஸ் பெறப்படுகிறது.  சொமேட்டொவின் அனைத்து டெலிவரி பிரதிநிதிகளும் ஒரே மாதிரியாக சிவப்பு நிற உடையே அணிவார்கள்.

இதன் மூலம் வெளித்தோற்றத்தின் மூலம் உணவு டெலிவரி செய்வோர் சைவ உணவு விநியோகிக்கிறாரா அல்லது அசைவ உணவு விநியோகிக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் உணவு டெலிவரி செய்யும்போது ஆப்பில் தாங்கள் சுத்த சைவ டெலிவரி குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தி இருப்பார்கள். ஆகையால் சைவ உணவு விரும்பிகள் அவர்கள் பிரத்யேக சைவ உணவு டெலிவரி பிரதிநிதி என்ற நம்பிக்கையைப் பெறலாம்.

மேலும், இதன் மூலம் எங்கள் டெலிவரி பணியாளர்கள் தேவையற்ற சிக்கல்களுக்கு ஆளாவது தவிர்க்கப்படும். இந்த இருவேறு நிற உடையால் சில குடியிருப்புவாசிகள் அவர்களது உரிமையாளர்களின் அதிருப்திக்கு உள்ளாகலாம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதை நாங்கள் புரிந்து கொண்டோம். எங்களால் யாருக்கும் சிக்கல் ஏற்படக்கூடாது.

சில நேரங்களில் இத்தகைய எதிர்வினை கூட நன்மை தரும். நாங்கள் எப்போதும் எவ்வித பெருமையும், தலைக்கனமும் இல்லாமல் பொதுமக்கள் கருத்துகளுக்கு செவிசாய்ப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement