‘வீரர்களின் கண்கள் கண்ணீரால் நிரம்பின’ - ராணுவ நிகழ்வுகளை பகிர்ந்த BTS ஜின்!
‘ராணுவத்தினரின் கண்கள் கண்ணீரால் நிரம்பின’ என தான் ராணுவத்திலிருந்து வெளி வந்த நாள் குறித்து BTS ஜின் பகிர்ந்துள்ளார்.
உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்று தென்கொரியாவை சேர்ந்த BTS. ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த இசைக்குழு ஏராளமான இசை ஆல்பங்களையும், பாடல்களையும் வாரி வழங்கியுள்ளது.
தற்போது BTS குழுவினர் ராணுவ பயிற்சி பெற்று வருகின்றனர். தென்கொரியாவில் இளைஞர்கள் அனைவரும் கட்டாய ராணுவப் பயிற்சி பெறவேண்டும். அந்த வகையில் BTS குழுவினரும் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஜின்னின் பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் தான் வெளியே வந்தார்.
தொடர்ந்து தனது துறைரீதியான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். முதலில் பிடிஎஸ் தொடங்கி 11 ஆண்டுகள் ஆனதையடுத்து கொண்டாடப்பட்ட 2024 BTS Festa என்ற விழாவில் கலந்துகொண்டார். பின்னர் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கொரியன் நாளிதழ் ஒன்றில் அவர் பேசியுள்ளார். அப்போது ராணுவ முகாமில் தனக்கு நேர்ந்த நிகழ்வுகள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.
ராணுவத்தில் இருந்து தான் வெளிவரும் போது தனது அந்த முகாமில் இருந்த அனைவரும் அழுததாக தெரிவித்துள்ளார். ஒரு மூத்தவர் வெளியேறும்போது அனைவரும் அழுவர். ஆனால் மூத்தவர் என்பதைவிட பிரபலமாக இருந்ததால் அதிகம் அழுதனர். மேலும் தனது ராணுவ வருவாயை அங்குள்ளவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதற்கு பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.