"கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது" - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வைகோ!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி எனது சொந்த ஊராட்சி ஆகும். இக்கிராமம், சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு எடுத்துக்காட்டாக உள்ள கிராமம் ஆகும்.
இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுப் புறமும் மிகவும் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி, தமிழ்நாட்டின் சிறந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்து கால்நடைகளை வளர்த்து வரும் இப்பகுதி மக்களுக்கு, இக்கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையும் சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறது.
18 சாதிகளைச் சேர்ந்தவர்கள் கலிங்கப்பட்டி கிராமத்தில் வாழ்கிறார்கள். இம்மக்கள் அனைவருக்கும் ஒரே சமத்துவ பொது மயானம் இன்று வரை இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசின் சமத்துவ மயான விருதை இரண்டு முறை கலிங்கப்பட்டி கிராமம் பெற்றுள்ளது. 500 ஆண்டுகளில் ஒரு சிறு பிணக்கோ, சாதி, மத மோதலோ வந்தது இல்லை என்ற பெருமைக்குரியது.
கலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ளவர்கள் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இருந்துகொள்ளுங்கள். ஆனால் அதனால் நமது ஊரில், அரசியல் சண்டையோ, சாதிச் சண்டையோ வந்துவிடக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘சமூக நல்லிணக்க ஊராட்சி விருது -2025’ விருதினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வழங்கி சிறப்பித்திருக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விருதினை பெரும் அளவிற்கு மிகச் சிறப்பாக பணியாற்றி வரும் கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மணிமொழி சந்துரு அவர்களுக்கும், ஊராட்சி செயலாளருக்கும், வார்டு உறுப்பினர்களுக்கும், ஒன்றியக் கவுன்சிலருக்கும் வாழ்த்துகளைகளையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.