#Diwaliஐ முன்னிட்டு சென்னையில் மட்டும் இவ்வளவு மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகளா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 213.61 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று (அக்.31) கோலகலமாக கொண்டாடப்பட்டது. பலரும் நேற்று முன்தினம் முதலே பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இதனால், சென்னை மாநகர சாலைகளில் ஏராளமான பட்டாசு குப்பைகள் குவிந்தன. இதை அகற்றுவதற்காக, சென்னை மாநகராட்சியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பட்டாசுக் குப்பைகளை அகற்றுவதற்காக மட்டும் 19 ஆயிரத்து 600 தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கம்பிகள், பேப்பர்கள் மற்றும் அட்டைகள் என தனித்தனியாக தரம்பிரித்து குப்பைகளை சேகரித்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கூடுதலாக சேகரமாகும் பட்டாசு குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாக சேகரிக்கப்படும்.
அவ்வாறு சேகரமாகும் பட்டாசு குப்பைகள் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் சேகரிப்பு மற்றும் அகற்றும் தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மன்ட் லிமிடெட் நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று முறையாக அகற்றுவதற்காக 33 எண்ணிக்கையிலான தனி வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று மாலை 4மணி வரை சென்னையில் 213.61 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. குப்பைகளை அகற்றும் பணிகளை தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.