2023-24-ல் இத்தனை குழந்தை திருமணங்களா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
2023-24ல் 14,137 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம் செய்யப்படுவதால், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் எதிர்காலமும், நல்வாழ்வும் பாதிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு வயதிற்குகேற்ற உடல் நலம், கல்வி ஆகியவை கிடைக்காமல் குழந்தைகளின் முன்னேற்றம் தடைபடுவதற்கான வாய்ப்பாக அமைகிறது. இதனையடுத்து குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தவும், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அவர்களின் பாதுகாப்பான சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையிலும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் கடந்த 2023-24ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 265 மாவட்டங்களில் 14,137 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய குழந்தை பாதுகாப்பு ஆய்வுக் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "கடந்த 2023-24ம் ஆண்டில் சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம், 265 மாவட்டங்களில் 14,137 குழந்தை திருமணங்களையும், ஊராட்சிகளின் உதவி மூலம் 59,364 குழந்தை திருமணங்களையும் 161 சமூக அமைப்புகள் தடுத்து நிறுத்தின. நாட்டில் ஒருநாளில் 4,442 பெண் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் 3,863 குழந்தை திருமண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு 11,236 சிறுமிகள் கட்டாய திருமணத்துக்காக கடத்தப்பட்டனா். இது 2022ம் ஆண்டு 13,981 ஆக அதிகரித்தது. 2020 முதல் 2022 வரையிலான காலத்தில் கட்டாய திருமணத்துக்காக சிறுமிகள் கடத்தப்பட்டது 24 சதவீதம் அதிகரித்தது.
2021-22 முதல் 2023-24-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் குழந்தை திருமண சம்பவங்கள் 81 சதவீதம் குறைந்தன. குழந்தை திருமணங்கள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்தல், கைது செய்தல் போன்ற சட்டரீதியான நடவடிக்கைகளின் மூலம் இதனை தடுக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.