For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை ஒரு கண்டன குரல்கூட இந்தியாவிலிருந்து எழவில்லை” - செல்வப்பெருந்தகை!

09:56 PM Jun 07, 2024 IST | Web Editor
”இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை ஒரு கண்டன குரல்கூட இந்தியாவிலிருந்து எழவில்லை”   செல்வப்பெருந்தகை
Advertisement

“அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை ஒரு கண்டன குரல்கூட இந்தியாவிலிருந்து எழவில்லை” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Advertisement

இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையிலான போர் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது. இப்போருக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும் போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் காசா மீது பல ஏவுகணைத் தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை கொன்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் காசாவின் ரஃபா பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பல நாடுகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. இதனை கண்டித்து பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ , காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் வீரபாண்டியன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பத்ரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அப்போது பேசிய தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா,

”கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய போராட்டம் தற்போது வரை நடைபெற்று வருவது எதார்த்தமான உண்மை. பாலஸ்தீன மக்களின் விவசாய நிலங்களை, ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளார்கள். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவானதை அன்று காந்தியடிகள் எதிர்த்தார் என்பது வரலாற்றில் உள்ளது.

1947ல் பாலஸ்தீன மக்களின் இடத்தைப் பிடுங்கி வலுக்கட்டாயமாக உருவாகிய நாடு
இஸ்ரேல். இதேபோன்று தங்களின் நிலத்தை விரிவாக்கம் செய்து கொண்டே இருந்தது
இஸ்ரேல். இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக பல்வேறு விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாலஸ்தீன நாட்டை இந்திராகாந்தி அங்கீகரித்தார்.

ரஃபாவில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீன மக்கள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.
பாலஸ்தீனத்தில் 70,000 டன் குண்டுகள் வீசப்பட்டதாக புள்ளி விவரங்கள் நமக்கு
வருகிறது. அப்போது அங்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பதை எண்ணி பார்க்க
வேண்டும். 12 தரமான பல்கலைக்கழகங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு இந்தியா குண்டுகளை கொடுத்தது என்பது எதார்த்தமான உண்மை. நாடாளுமன்றத்தில் வலுமையான எதிர்க்கட்சியினை உருவாக்கி உள்ளனர். நாடாளுமன்றத்தில் இஸ்ரேலின் பயங்கரவாதத்தை கண்டித்து குரல் எழுப்ப அனைவரும் முன்வர வேண்டும்” என பேசினார்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை,

பாலஸ்தீனத்தில் பிணங்களை கொத்து கொத்தாக குவித்து உள்ளார்கள். அதற்காக யாரும் வாய் திறக்க வில்லை. மனித நேயம் இல்லாமல் அவர்கள் கொலை செய்கிறார்கள். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் அவர்களை அழிப்பதற்கு இங்கு குண்டுகளை அளித்து வருகிறார்கள்.

நம் நாட்டின் பிரதமர் வாய் திறக்காமல் உள்ளார். தலைவர்களின் பேச்சை ஒட்டு
கேட்பதற்கும், நீதிபதிகளை மிரட்டுவதற்கும், ஊடகங்களை மிரட்டுவதற்கும், இஸ்ரேலில் இருந்து இந்தியா ஒரு சாஃப்ட்வேரை வாங்கி உள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து எந்த ஒரு கண்டன குரலும் எழும்பவில்லை. இந்தியாவில் உள்ள தலைவர்களை வேவு பார்க்க எனக்கு நீ உதவி செய், நான் உனக்கு குண்டுகளை தருகிறேன் என்று கூறுகிறார் மோடி.

உங்களை ராமர் மற்றும் விவேகானந்தர் இருவரும் கை விட்டு விட்டனர். டெபாசிட் இழக்க ராமரே வேலை பார்த்து விட்டார். முஸ்லீம், இந்துக்கள் உணர்வை பிரித்தாள முயற்சி செய்கிறார் மோடி. அயோத்தி கோயில் உள்ள தொகுதியில் தோல்வி. வாரணாசி தொகுதியில் 4 சுற்றில் பின்னடைவு. தோற்கும் தருவாயில் இருந்த உங்களுக்கு யாரோ உதவி செய்து வெற்றி பெற வைத்துள்ளார்கள். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் உதவி உங்களுக்கு எப்போதும் வேண்டும்.

இஸ்ரேல் போரை கண்டிக்காமல் மெளனமாக இருக்கிறார் மோடி. எங்கள் தலைவரிடம் சொல்லி இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவோம். எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தமிழ் மண் குரல் கொடுக்கும். முதல் பாராளுமன்றத்தில் 40 பாராளுமன்ற உறுப்பினர்களும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். விரைவில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்றார்.

Tags :
Advertisement