வடமாநிலங்களை வாட்டும் குளிர் - கடும் பனிப்பொழிவால் ஸ்தம்பிக்கும் விமான சேவை!
வடமாநிலங்களில் கடும் குளிரால் பனிமூட்டம் நிலவுவதால், நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பனி கடுமையாக தாக்கி வருகிறது. காலை நீண்ட நேரம் வரை பனி மிகவும் அடர்ந்து காணப்படுவதால் மக்களின் இயல்பான வாழ்க்கை கடுமையா பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பனிப்பொழிவு காரணமாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மேலும் விமானங்கள் தாமதமாக வரக்கூடும் என்று கூறப்படுவதால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் பனிமூட்டம் காரணமாக புறப்படவேண்டிய விமானங்கள் பலவும் ரத்து செய்யப்படுவதால் தரை இறங்க வேண்டிய விமானங்களுக்கு இடம் ஒதுக்குவதில் ஏற்படும் தாமதமும் சேர்ந்து பயணிகளை அவதிக்குள்ளாக்கி வருகிறது.
தலைநகர் டெல்லி விமானநிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பம் மெல்ல மெல்ல பிற நகரங்களுக்கும் பரவி வருகிறது. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களிலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு சில விமானங்களின் வருகை தாமதமாகலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது.
தலைநகரின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டு இருப்பதால், மக்கள் எதிரில் வரும் வாகனங்ளை பார்க்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மக்கள் பார்க்கும் திறன் மிகவும் குறைந்து காணப்படுகிறது. கிட்டத்தட்ட வடஇந்தியா முழுவதும் காணப்படும் இந்த வானிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.
வழக்கமாக இந்த பருவத்தில் பதிவாகும் வெப்பநிலையை விட இந்த வருடம் மிகவும் குறைவான வெப்பநிலை பதிவாகி வருகிறது. பனியால் ஏற்படும் விளைவுகளை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதன்படி ஜெட் ஸ்ட்ரீம் காற்று அடுத்து 150 நாட்களுக்கு சமவெளிப்பகுதிகளில் பயணிக்கவிருப்பதால் ஜம்மு & காஷ்மீர், லடாக், கில்கிட் பல்டிஸ்தான், முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் பகுதிகளில் லேசான மழையோ அல்லது பனிப்பொழிவோ இருக்கக் கூடும்.
இவ்வார இறுதியில் மேகமூட்டம் போன்ற பனிப்பொழிவு, அடர் பனிப்பொழிவு பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியின் பல பகுதிகளில் இரவு தொடங்கி காலை விடிந்தும் பலமணி நேரம் தொடரக்கூடும்.
கோடை காலத்தில் வீசும் அனல் காற்று போல, தற்போது குளிர் அலை வீசும். சண்டிகர், டெல்லி மற்றும் ஹரியானா பகுதிகளை இந்த குளிர் அலை வார இறுதியில் தாக்கக் கூடும். ஆகவே மக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது .