For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

35 நாள்களில் 6 முறை ஒரே மனிதனை சீண்டிய பாம்புகள்... அதுவும் சனி, ஞாயிறுகளில் மட்டும்!

09:02 PM Jul 09, 2024 IST | Web Editor
35 நாள்களில் 6 முறை ஒரே மனிதனை சீண்டிய பாம்புகள்    அதுவும் சனி  ஞாயிறுகளில் மட்டும்
Advertisement

உத்திரபிரதேசத்தில் விகாஸ் துபே என்பவரை கடந்த 35 நாள்களில் 6 முறை பாம்பு கடித்திருக்கிறது. ஆனால், உரிய மருத்துவம் செய்யப்பட்டதால் ஒவ்வொரு முறையும் அவர் உயிர் தப்பியிருக்கிறார்.

Advertisement

“பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பார்கள்” இந்த வரிகளில் ஆரம்பித்தால் தான் சரியாக இருக்கும். பாம்பு கடித்து விஷம் ஏறினால் கொஞ்ச நேரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுவிடும். இதுபோல ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் உயிரிழக்கிறார்களாம். ஆனால், இங்கே உத்தரப் பிரதேச மாநிலத்தில் மிகவும் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், அந்த நிலையில் சிக்கியிருக்கும் அந்த நபர் மிகவும் பாவம் என்றே கூறத் தோன்றுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் விகாஸ் துபே. இவரை கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 6 முறை பாம்பு கடித்துள்ளதாம். ஒவ்வொரு முறையும் பாம்புகள் அவரை கடிப்பதும், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதும், பிறகு குணமடைந்து வீடு திரும்புவதும் தொடர்கதையாக இருந்திருக்கிறது.

கடந்த ஜூன் 2ம் தேதி இந்த அத்தியாயத்தின் முதல் சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் அவரது வீட்டில் பாம்பு புகுந்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்த அவர் அப்போது தான் எழுந்துள்ளார். எல்லா மனிதர்களைப் போல இவரும் தேநீர் எதிர்பார்த்திருப்பார் போல. ஆனால், அவருக்கு கிடைத்ததோ பாம்பு கடி. இதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பிறகு கடந்த ஜூலை 6-ம் தேதி வரை மட்டும் துபேவை ஆறு முறை பாம்பு கடித்துள்ளதாம்.

இந்த அத்தியாயத்தில், முதல் 4 முறை அவர் வீட்டில் இருந்த போது பாம்பு கடித்துள்ளது. இதனால் அவரது வீட்டில் இருந்தவர்களே துபேவை பார்த்து அஞ்சியுள்ளனர். "வீட்ல இருந்தா தான கடிக்கிது, இனிமேல் வீட்ல இருக்காத” என்று யாரோ துபேவிற்கு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் ராதாநகரில் உள்ள தனது அத்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கும் அவரை பாம்பு கடிக்கும் சம்பவம் தொடர்ந்துள்ளது.

இதனால் அச்சமடைந்த துபேவின் பெற்றோர் மீண்டும் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனால், கடந்த ஜூலை 6-ம் தேதி, மீண்டும் துபேவை பாம்பு கடித்துள்ளது. அப்போது தான் அவரது உடல்நிலை மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் சொன்னதால் துபேவின் பெற்றோர் கலக்கமடைந்தனர். இருப்பினும், திடீரென என்ன அதிசயமோ தெரியவில்லை துபே குணமடைந்து இருக்கிறார்.

இதில் “அடடே!” விஷயம் என்னவென்றால் விகாஸ் துபேவை 6 முறை பாம்புகள் கடித்துள்ள நிலையில், அவை அனைத்தும் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் தான் நடந்துள்ளன. மேலும், ஒவ்வொரு முறையும் பாம்பு தன்னை கடிப்பதற்கு முன்பும் ஏதோ நடக்கப் போகிறது என தோன்றியதாக அவர் கூறுகிறார். எனவே எனக்கு நடக்கும் சம்பவங்களின் பின்னணியில் ஏதோ இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகெங்கும் ஆண்டுக்கு 50 லட்சம் பாம்புக் கடி சம்பவங்கள் நடக்கிறது. இதனால் ஆண்டுதோறும் சுமார் 1.3 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். மேலும், பல லட்சம் பேருக்குப் பலவித குறைபாடுகளும் ஏற்படுகிறது.

Tags :
Advertisement