மக்களவையில் புகைக் குப்பி வீசப்பட்ட விவகாரம்: 6 வது நபர் கைது!
மக்களவையில் புகைக் குப்பி வீசப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென குதித்த 2 பேர், இருக்கைகளின் மீது ஏறி சபாநாயகர் மாடத்தை நோக்கி ஓட முயற்சித்தனர். அவர்கள் கண்ணீர் புகை குப்பிகளை மக்களவையில் வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவலர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து அவர்களை கைது செய்தனர்.
அதேபோல் நாடாளுமன்றத்தின் வளாகத்திலும் கண்ணீர் புகை குப்பிகளை வீசிய இருவரை காவலர்கள் கைது செய்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் இந்த சம்பவத்தில் கைதாகி உள்ளனர். இதையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிராவை சேர்ந்த நீலம், அமோல் ஷிண்டே, சாகர் ஷர்மா, மனோ ரஞ்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் மக்களவையில் புகைக்குப்பி வீசப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் 7 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்ட சதி என்று டெல்லி காவல் துறையினர் நீதிமன்றத்தில் வாதிட்டனர். மேலும், இந்த அத்துமீறல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மோடியை காணவில்லை என்ற துண்டுப் பிரசுரத்தை எடுத்துச் சென்றதாகவும், அவரைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு சுவிஸ் வங்கியில் இருந்து பணம் வழங்கப்படும் என்ற வாக்கியம் அதில் இடம் பெற்று இருந்ததாகவும் காவல் துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் தொடர்புடைய மகேஷ் குமாவத் என்பவரை டெல்லி காவல்துறை இன்று கைது செய்துள்ளது. இந்த சதியில் குமாவத்துக்கும் பங்கு உள்ளது என டெல்லி போலீசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகேஷ் குமாவத் நீலம் தேவியுடன் தொடர்பில் இருந்ததாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.