நாடாளுமன்றத்திற்குள் வீசப்பட்ட புகைக் குப்பி : எழுந்த முழக்கங்கள் - யாருக்கு எச்சரிக்கை....?
நாடாளுமன்றத்திற்குள் புகைக் குப்பி வீசப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியதால் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புகை குப்பி வீசப்பட்டத்து
யாருக்கு எச்சரிக்கை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடந்த 1929-ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் நாடாளுமன்றத்தில், ஆட்கள் இல்லாத பகுதியில் வெடிகுண்டுகளை வீசி.... துப்பாக்கியால் மேல் நோக்கிச் சுட்ட விட்டு, “கேளாத செவிகள் கேட்கட்டும்” என்கிற தலைப்பிலான துண்டறிக்கைகளை வீசினர் இருவர். தொடர்ந்து ’’இன்குலாப் ஜிந்தாபாத்....ஏகாதிபத்தியம் ஒழிக...உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்...’’ என்று முழக்கமிட்டு, தப்பிச் செல்லாமல் கைதாகினர். அந்த இருவரின் பெயர் பகத் சிங் மற்றும் படுகேஷ்வர் தத்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரான பகத் சிங் பெயரில் இணைந்த 4 பேர், தற்போது நாடாளுமன்றத்திற்கு சென்று, வீசிய புகைக் குப்பியும் எழுப்பிய முழக்கங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த தினமும் மிக முக்கிய தினம் என்பதால், தொடர்ந்து பேசு பொருளாகியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் 22வது நினைவு நாள், கடந்த 13ம் தேதி அனுசரிக்கப்பட்டது. பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர், சபாநாயகர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அதற்கு அடுத்த சில மணி நேரத்தில், அதாவது பகல் 1 மணியளவில் நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து இருவர், வளாகத்தில் இருவர் என 4 பேர் விழாக் காலங்களில் பயன்படுத்தும் புகைக் குப்பிகளை வீசினர். அவர்கள் ‘’சர்வாதிகாரம் ஒழிக...பாரத் மாத கீ ஜே...’’ என்றெல்லாம் முழக்கமிட்டனர். நாடாளுமன்றத்திற்குள் சென்ற இருவர் சாகர் சர்மா, மனோரஞ்சன் என்பதும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த இருவர், நீலம் கவுர், அமோல் ஷிண்டே என்பதும் தெரியவந்துள்ளது. யார் இவர்கள்? எதற்காக வந்தார்கள்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்திற்குள் சென்ற சாகர் சர்மா, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ ராம்நகரை சேர்ந்தவர். தச்சுத் தொழிலாளியின் மகன். லக்னோவில் ரிக் ஷா ஓட்டி வருகிறார். மனைவி, மகள் உள்ளனர். டெல்லியில் ஒரு போராட்டத்தில் பங்கேற்க செல்வதாக சொல்லி விட்டு, வீட்டிலிருந்து சென்றுள்ளார். அவருடன் சென்ற மனோரஞ்சன், கர்நாடகா மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்தவர். பெங்களூரூவில் உள்ள விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் பி.டெக். கணினி அறிவியல் பட்டம் பெற்றவர். மிகவும் அமைதியான குணம் கொண்ட தனது மகன் தங்கம் என்கிறார்கள் அவரது பெற்றோர்கள். சிறுவயது முதல் புரட்சியாளர்கள், முற்போக்காளார்களின் புத்தகங்களை ஆர்வமாக படிப்பவர் என்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் வெளியில் இருந்த இருவரில் ஒருவரான நீலம் கவுர், ஹரியாணாவின் ஜிந்த் மாவட்ட கஸோ குர்த் கிராமத்தை சேர்ந்தவர். இவர் எம்ஏ, எம்எட், எம்.பில் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசிய தகுதித் தேர்வான நெட் தேர்வும் எழுதி, உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர். மல்யுத்த வீராங்கனையான இவர், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். இந்திய குடிமைப்பணிக்கான தேர்வுகளை எழுதியவர்.
மற்றொருவரான அமோல் ஷிண்டே, மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டம் நவகுந்தாரி கிராமத்தை சேர்ந்தவர்.. இளங்கலை பட்டதாரியான இவரது குடும்பம் ஏழ்மையானது. இந்திய ராணுவம், காவல் துறையில் சேர்ந்து பணியாற்ற தயாராகி வந்தவர். ராணுவத்தின் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க செல்வதாக கடந்த 9ம் தேதி பெற்றோரிடம் சொல்லி விட்டு புறப்பட்டுள்ளார்.
இவர்களைத் தவிர மேலும் இருவர் உள்ளனர். அதில் ஒருவர் விக்கி என்று அழைக்கப்படும் விஷால் சர்மா. டெல்லியில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக இருந்தார். தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். ஹரியாணாவின் குருகிராமில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவரது அறையில்தான் அனைவரும் தங்கியுள்ளனர். அங்குதான் திட்டம் தீட்டியுள்ளனர் என்கிறார்கள்.
இந்த 6 பேர் குழுவின் முக்கிய நபராக சொல்லப்படுபவர் லலித் ஜா. சம்பவ இடத்தில் அவர் இல்லை என்றாலும் சம்பவத்தின் மூளை இவர்தான் என்றும் சொல்லப்படுகிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். தான் தங்கியிருந்த பகுதி மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் இருந்து திடீரென வேறு இடத்துக்குச் சென்றுள்ளார். அனைவரும் ’’பகத் சிங் பேன் கிளப்’’ என்கிற சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் ஒருங்கிணைந்துள்ளனர். மைசூர், டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர் என்கிறார்கள்.
மேலும், நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவின் போதே புகைக் குப்பிகளை வீச திட்டமிட்டுள்ளனர். அப்போது, பார்வையாளர் பாஸ் கிடைக்காததால் அந்த திட்டத்தை கைவிட்டுள்ளனர். ஆனாலும் திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து ஆலோசித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பல் அடுக்கு சோதனை நடைமுறைகளை பலமுறை சென்று நோட்டமிட்டுள்ளனர். ஷூக்கள் பரிசோதனை செய்யப்படுவது இல்லை என்பது அறிந்து, ஷூக்களுக்குள் வைத்து புகை குப்பிகளை கொண்டு சென்றுள்ளனர். அதற்கு முன்னதாக, கடந்த 10-ம் தேதி 6 பேரும் டெல்லியில் கூடி, திட்டத்தை இறுதி செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்திற்குள் சென்றவர்கள், மூளையாக செயல்பட்டவர் என அனைவரும் தடை செய்யப்பட்ட எந்த அமைப்பிலும் இல்லை. சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்ட சாமானியர்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில், எளிய குடும்பங்களைச் சேர்ந்த இவர்களின் எதிர்ப்புணர்வும் முழக்கங்களும் சொல்லும் செய்தி என்ன...? இது யாருக்கான எச்சரிக்கை....? தன்னெழுச்சியான எதிர்ப்பா..? புறத்தூண்டுதலின் வெளிப்பாடா...? என்பதெல்லாம் அடுத்த கட்ட விசாரணையிலும் அடுத்தடுத்த நாட்களிலும் தெரியும்.