“ஸ்மித் எந்த வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற திட்டமில்லை!” - வாரன் கிரெய்க் திட்டவட்டம்!
ஸ்மித் எந்த வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற திட்டமில்லை என அவரது மேலாளர் வாரன் கிரெய்க் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வார்னர் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்தின் ஓய்வு குறித்த பேச்சு தலை தூக்கியுள்ளது.
இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஸ்மித்தின் மேலாளர் வாரன் கிரெய்க், ஸ்மித் எந்த வித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற திட்டமிடவில்லை என கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,
“ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் நிறைய சாதனைகளைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஒரு அங்கமாக ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியுடன் ஸ்டீவ் ஸ்மித் இணைந்து அடையவுள்ள இலக்குகள் நிறைய உள்ளன. அவர் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை நெருங்கி வருகிறார். அவ்வாறு எடுக்கும்பட்சத்தில், 10 ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.