ஸ்மார்ட் வாட்சை தொடர்ந்து ஸ்மார்ட் மோதிரம்… இந்தியாவில் அறிமுகம் செய்த #Samsung!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட் மோதிரங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தென்கொரிய நிறுவனமான சாம்சங், தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் முன்னதாகவே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் மோதிரங்கள், தற்போது இந்திய சந்தையிலும் அறிமுகமாகியுள்ள நிலையில், இந்த வாரம் முதல் முன்பதிவுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்களைப் போல, இப்போது கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இவை 9 விதமான அளவுகளில் அனைத்து வகையான பயனர்களுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் மோதிரங்கள் டைட்டானியம் பிளாக், டைட்டானியம் சில்வர், மற்றும் டைட்டானியம் கோல்டு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கின்றன. இதன் மொத்த வெளிப்புற உலோகம் டைட்டானியத்தால் ஆனது. இதனால் இந்த ஸ்மார்ட் மோதிரங்கள் வலிமையானதாக இருக்கும். மேலும், இவை மழையிலோ அல்லது நீரிலோ பட்டாலும் இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்தியாவில் அறிமுகமாகியுள்ளதை முன்னிட்டு, அக்டோபர் 18-க்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு 25 வாட்ஸ் அடாப்டர் இலவசமாக வழங்கப்படும் என சாம்சங் அறிவித்துள்ளது. சாம்சங் இணையதளம் மற்றும் ஷோரூம்களில் செய்யலாம் இதற்கான முன்பதிவை செய்யலாம். மேலும் விரைவில் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில் இவை கிடைக்கும். இந்திய சந்தையில் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரத்தின் விலை ரூ. 38,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் பயன்கள் என்னென்ன தெரியுமா?
இந்த கேலக்ஸி ரிங் உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் பிட்னஸ் பேண்டுகளுக்கு மாற்றாக உருவாகியுள்ளது. சாம்சங் ஹெல்த் அப்ளிகேஷ் மூலம் இந்த மோதிரத்தை இணைத்து பயன்படுத்தலாம். இது உடல் நிலையை 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கேலக்ஸி ரிங் இதயத் துடிப்பு சீராக இருக்கிறதா, போதிய அளவு உறங்குகிறோமா, ரத்த அழுத்தம் சரியாக இருக்கிறதா என்று கவனித்துக்கொண்டே இருக்கும்.
இந்த மோதிரத்தில் உடல் வெப்பநிலையை உணரும் சென்சாரும் இருக்கிறது. உடலில் உஷ்ணம் அதிகரித்தால் ஹெல்ட் செயலியில் நோட்டிஃபிகேஷன் மூலம் அலர்ட் வந்துவிடும். சாம்சங் ரிங்கில் முக்கியமான இன்னொரு அம்சம் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் Galaxy AI என்ற அம்சம் இந்த மோதிரத்தின் செயல்திறனை மேலும் அதிகரிக்கிறது. இந்த மோதிரத்தை தொலைத்துவிட்டாலோ, மறதியாக எங்கேயாவது வைத்துவிட்டாலோ மொபைலில் இருந்து 'Find my ring' என்ற ஆப்ஷன் மூலம் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். எனவே மோதிரத்தை பத்திரமாக வைத்துக்கொள்வது பற்றியும் கவலை வேண்டாம்.