மெக்சிகோவில் விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு!
மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாநிலத்தில் உள்ள சாண்டா மரியா டெல் ஓரோவில் ஒரு செஸ்னா 207 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேற்கு மெக்சிகோவில் உள்ள ஜலிஸ்கோவின் பெரும் வனப்பகுதியில் நேற்று (டிச. 22) சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 7 பேர் இறந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். செஸ்னா 207 ரக விமானம், அண்டை மாநிலமான மைக்கோவாகனில் உள்ள லா பரோட்டாவில் இருந்து நேற்று பறந்து கொண்டிருந்தது. மேற்கு மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தின் காட்டுப்பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து ஜலிஸ்கோ சிவில் பாதுகாப்பு துறை அதிகாரிகள், விபத்து நடந்தது அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் அங்கு சென்றடைவது மிகுந்த சிரமமாக உள்ளதாகவும், அந்த விபத்தினால் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு, ஆபத்து எதுவும் தொடராமல் இருக்க அந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் ஜலிஸ்கோ சிவில் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.
மொத்தம் 7 பேர் பலியான நிலையில், அவர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்த பின்னர் பலியானவர்களின் உடல்களை அங்கிருந்து அகற்றப்படுவதாகவும், அடர்ந்த காட்டுப்பகுதியில் மேலும் யாராவது இந்த விபத்தினால் பலியாகியுள்ளார்களா என்று விசாரணை நடந்து வருவதாகவும் ஜலிஸ்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.