#SLvsNZ | அறிமுக போட்டியிலேயே அசத்திய இலங்கை வீரர்!
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே இலங்கையின் நிஷான் பெய்ரிஸ் முதல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இலங்கை அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை பந்துவீச்சாளர்களில் ஒருவரான நிஷான் பெய்ரிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளரான விஸ்வா ஃபெர்னாண்டோ காயம் காரணமாக விலகியதை அடுத்து, நிஷான் பெய்ரிஸ் அணியில் சேர்க்கப்பட்டார். நிஷான் பெய்ரிஸ் தனது அறிமுகப் போட்டியிலேயே இலங்கை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளார்.
27 வயதாகும் நிஷான் பெய்ரிஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். குறிப்பாக 2வது இன்னிங்ஸில் முக்கிய நியூசிலாந்து வீரர்களான டாம் லாதம், கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் பிளண்டெல், கிளன் பிளிப்ஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டெஸ்ட்டில் அறிமுகப் போட்டியிலேயே முதல் 5 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளார்.