வாய்ப்பு தருவதாக மோசடி | யாரும் நம்ப வேண்டாம் என #SKProduction எச்சரிக்கை!
தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்பு தருவதாக கூறி மோசடி நடைபெறுவதாகவும் யாரும் நம்ப வேண்டாம் எனவும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய்க்கு பிறகு ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் வீடியோ ஜாக்கி, தொகுப்பாளர் என வளர்ந்து வந்த அவர் தனுஷின் 3 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மெரினா, எதிர்நீச்சல் என தனது திறமையான மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கவனம் செலுத்தும் அதேவேளையில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்தும் வருகிறார். கனா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கிய சிவகார்த்திகேயன் குரங்கு பெடல், வாழ், கொட்டுக்காளி என நல்ல தயாரிப்பாளாராகவும் உருவாகியுள்ளார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி வாய்ப்பு தருவதாக பலர் மோசடியில் ஈடுபடுவதாகவும் இதனை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
” எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம். இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளனர்.