சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து; மேலும் ஒருவர் கைது ; உரிமையாளரை பிடிக்க தனிப்படை!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ஆண்டியாபுரத்தில் நேற்று (ஜூலை21) மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை வழக்கம்போல் ஆலையில் பட்டாசு தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்து வந்த மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஆலையின் உரிமையாளர் சீனிவாசன், மேலாளர் பிரபாகரன், மற்றும் போர்மேன் செல்வகுமார் ஆகிய மூன்று பேர் மீது மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், கவனக்குறைவாக மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விபத்து நடந்த தினத்திலேயே போர்மேன் செல்வகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று ஆலையின் மேலாளர் பிரபாகரனையும் போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து ஆலையின் உரிமையாளரான சீனிவாசன் தலைமறைவாகி உள்ள நிலையில், அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.