மிக்ஜாம் புயல் பாதிப்பு - முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை, அமைச்சர் உதயநிதியிடம் வழங்கியுள்ளார்.
அண்மையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. இதையடுத்து, தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் தமிழ்நாடு அரசும், மாநகராட்சி நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தன்னார்வலர்கள், நடிகர்கள்,நடிகைகள், பலரும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். மேலும், சிலர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை அளித்தும் வருகின்றனர்.
இதனையடுத்து, மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை அமைச்சர் உதயநிதியிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனங்கள், இயக்கங்கள், தன்னார்வலர்கள் என பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். அவருக்கு அன்பும், நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம். இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.