#GOAT படத்தில் சிவகார்த்திகேயனின் காட்சிகள் நீக்கப்பட்டதா? வெங்கட் பிரபு சொல்வது என்ன?
கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த சில சுவாரசியமான காட்சிகளை படத்தின் நீளம் கருதி நீக்கிவிட்டதாகவும், விரைவில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளிவிடுவதாகவும் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். த.வெ.க. கட்சியைத் தொடங்கிய பிறகு விஜய் இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறியதால், அவரது கடைசி திரைப்படத்திற்கு முந்தைய படமாக இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே வழக்கத்தை காட்டிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 126.32 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் சிலர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இதேபோல இந்தப் படத்தில் பலர் சிறப்புத் தோற்றங்களில் சிலர் நடித்துள்ளார்கள். அதில் ஒருவர் சிவகார்த்திகேயன். சேனலில் காமடி நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி தற்போது வளர்ந்து வரும் ஹீரோகவாக உள்ள சிவகார்த்திகேயன் விரைவில் விஜயின் இடத்தை பிடிப்பார் எனவும் சிலர் கூறுகின்றனர். இந்தக் கருத்தை வைத்து கோட் திரைப்படத்தில் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இது குறித்து நேர்காணல் ஒன்றில் வெங்கட் பிரபு பேசியதாவது, "தொடக்கத்தில் சில வசனங்கள் வேறு விதமாக இருந்தன. ஆனால், விஜய் கூடுதலாக இந்தாங்கா சிவா, இந்தத் துப்பாக்கியைப் பிடிங்க. நிறைய பேரோட உயிர் உங்ககைல இருக்கு என்று கூறுவார். துப்பாக்கி விஜய் திரைப்படம். இதைச் சொல்லுவதற்கு எவ்வளவு பெரிய மனசு வேண்டும்.
இதேபோல அந்த காட்சியில் ஒரு வசனம் வரும் . இதைவிட பெரிய விஷயத்திற்காக போறீங்க நான் பார்த்துக்குறேன் என சிவகார்த்திகேயன் சொல்வார். அதற்கு விஜயும் ஓக்கே சொல்லிவிட்டு செல்வார். சிவகார்த்திகேயன் நடித்த சில சுவாரஸ்யமான காட்சிகளை படத்தின் நீளம் கருதி நீக்கிவிட்டோம். விரைவில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிடுவேன்” இவ்வாறு இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.