சிவகங்கை | மகளிர் உரிமை தொகை வழங்காததால் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்!
சிவகங்கை பகுதியில் மகளிர் உரிமை தொகை வழங்கவில்லை என கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அருகே காயங்குளம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்டது இந்திரா நகர் குட்டி தின்னி கிராமம். இங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயக் கூலி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகையானது இந்த கிராமத்தைச் சேர்ந்த சில குடும்ப பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதுடன், 52 குடும்பப் பெண்களுக்கு இந்த மகளிர் உரிமை தொகையானது தகுதி அடிப்படையில் மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக அந்த பகுதி மக்கள் பலமுறை வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிவகங்கை மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சம்பவ இடம் விரைந்து வந்த மானாமதுரை சிப்காட் காவல் துறையினர் மற்றும் சிவகங்கை வருவாய் துறையினர் கிராம மக்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அத்துடன் இன்று மாலை ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை அமைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர், அதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.