தமிழ் மீதும், தமிழ்நாடு மீதும் உண்மையான பற்றுக்கொண்டவர் சீதாராம் யெச்சூரி!
தமிழ் மீதும், தமிழ்நாடு மீதும் உண்மையான பற்று கொண்டவர் சீதாராம் யெச்சூரி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 72. அவரின் மறைவிற்கு நாட்டின் முக்கிய தலைவர்களும், அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அருணன் நியூஸ்7 தமிழ் வாயிலாக தனது இரங்கலை பகிர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது:
“கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்து வந்தார். மீண்டு எழுந்து வருவார் என காத்திருந்தோம். இப்படி ஒரு துயர சம்பவம் நிகழும் என எதிர்பார்க்கவில்லை. இது மார்க்சிஸ்டுக்கு மட்டும் இல்லை. உலகத்தில் இருக்ககூடிய அனைத்து ஏழை, எளிய உழைப்பாளி வர்க்கத்திற்கே பேரிழப்பு. ஏனெனில் அவர் ஒரு உலகத் தலைவர். பல நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அவரிடம் இன்றைய உலக நிலைமை பற்றியும், மதிப்பீடுகளையும், கருத்துகளையும் கேட்பர்.
காரணம் அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியானவர். ஏகாதிபத்திய உத்திகள், நுணுக்கங்கள், தந்திரங்கள் அறிந்த தலைவர். அதற்கு எதிராக எத்தகைய நிலைப்பாடுகளை உலக கம்யூனிஸ்டுகள் எடுக்க வேண்டும் என்பதை சொல்லக்கூடிய ஆற்றல்மிக்கவராக இருந்தார். அத்தகைய தலைவரை இன்றைய உழைப்பாளி வர்க்கம் இழந்து தவிக்கிறது. இந்தியாவில் அந்தந்த காலத்தில் மக்களின் எதிரி யார் என்பதை கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு அரசியல் வியூகம் அமைக்கக் கூடிய அற்றல்மிக்க தலைவர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க உருவான தலைவர்களில் ஒருவர் சீதாராம் யெச்சூரி.
பாஜகவிற்கும், ஆர்எஸ்எஸ்க்கும் எதிராக அரசியல்ரீதியாகவும், கருத்தியல்ரீதியாகவும் வியூகங்களை வகுக்க வேண்டும் என எடுத்துக்கூறியவர், அதனை நடைமுறைப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்.
அவருக்கு தமிழ் மீதும், தமிழ்நாடு மீதும் மிகையான பற்று உண்டு. வாக்குக்காக போலியான பற்றைக் காட்டுபவர் அல்ல. அதனால் தான் அவரை செம்மொழி மாநாட்டிற்கு அழைத்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
வெறும் அரசியல் தலைவர் மட்டும் அல்ல. வரலாற்றை மக்கள்தான் உருவாக்கினர். இனியும் அவர்கள்தான் உருவாக்குவார்கள். ஆனால் வரலாற்றில் தலைவர்களுக்கு தனி இடமும், பங்கும் உண்டு. அத்தகைய தனித்துவமான இடத்தை வகித்தவர் சீதாராம் யெச்சூரி. அவரது நினைவு என்றும் என் நெஞ்சில் இருக்கும்.
இவ்வாறு பேராசிரியர் அருணன் தெரிவித்தார்.