திருமணத்திற்கான SIP போஸ்டர்.. தவணை குறித்து கலாய்க்கும் நெட்டிசன்கள்...
ஒரு திருமணம் எவ்வளவு செலவு மிகுந்ததாக இருக்கும் என்பதை மனதில் வைத்து, மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் திருமணத்திற்கான முறையான முதலீட்டுத் திட்டங்களை (SIP) வழங்கும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
திருமணம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் மிக முக்கியமான மற்றும் மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திருமணத்தை திட்டமிடுவது, நடைமுறைப்படுத்துவது அன்றில் இருந்து, இன்று வரை ஒரு அசாதாரண நிகழ்வாகவே இருந்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் டெஸ்டினேஷன் திருமணங்கள் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது.
பாரம்பரிய சொந்த ஊரான இடங்களுக்குப் பதிலாக, உள் நாட்டிற்குள்ளும், வெளிநாட்டிலும் உள்ள பிரபல இடங்களில் திருமணம் செய்கின்றனர். இதுவே டெஸ்டினேஷன் திருமணம் என அழைக்கப்படுகிறது. இந்த இலக்கு திருமணங்கள் இணையற்ற அனுபவங்களை வழங்கும் அதே வேளையில், பெரும்பாலும் கூடுதல் செலவாகும். தம்பதிகள் அவர்களது விருந்தினர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்த நிறைய நேரம், முயற்சி மற்றும் முதலீடு தேவைப்படுகிறது.
ஒரு திருமணம் எவ்வளவு செலவு மிகுந்ததாக இருக்கும் என்பதை மனதில் வைத்து, மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒரு இலக்கு திருமணத்திற்கான முறையான முதலீட்டுத் திட்டங்களை (Systematic Investment Plans) வழங்கும் திட்டத்தை வடிவமைத்துள்ளது. இந்த திட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“இது மியூட்சுவல் ஃபண்ட் போன்ற திட்டம் என கூறப்படுகிறது. அதாவது, வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் செலுத்தவேண்டும். பின்னர் திருமணத்தேதி குறிப்பிட்ட பின்னர் அதனை எடுத்துக்கொள்ளலாம்” இந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த விளம்பரத்தில், “இலக்கு திருமணத்திற்கான எஸ்ஐபி” என்று எழுதப்பட்டிருந்தது. மாதத் தொகை ரூ.11,000-ல் தொடங்கி ரூ.43,500 வரை என அந்த இதற்கான திட்டங்கள் குறித்த தகவல் எழுதப்பட்டிருந்தது. இந்த இடுகை, பகிரப்பட்டதிலிருந்து, நெட்டிசன்கள் தங்கள் எதிர்வினை கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும் தவணை காலம் எவ்வளவு போன்ற கேள்விகளையும் அந்த பதிவில் பதிவிட்டு வருகின்றனர்.