Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பறிபோகும் மீனவர் படகுகளும்...படகுகளுக்கு பின்னால் இருக்கும் மீனவர்களின் அவலமும்...

12:20 PM Nov 10, 2023 IST | Web Editor
Advertisement

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கடல் எல்லையை வரையறுக்க இரு நாடுகளுக்கிடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை கடல் எல்லை ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.  முதல் ஒப்பந்தம் ஆடம்ஸ் பிரிட்ஜ் மற்றும் பால்க் ஜலசந்திக்கு இடையிலான கடல் எல்லையை வரையறுக்கவும், இரண்டாவது ஒப்பந்தம் மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவிற்கு இடையிலான கடல் எல்லையை வரையறுக்கவும் நடைமுறைபடுத்தப்பட்டது.  பால்க் ஜலசந்தி ஒப்பந்தத்தின்போது கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

ஆனால் கடல் எல்லைகளில் உள்ள பாரம்பரியப் பகுதிகளில் இருநாட்டு மீனவர்களும் மீன் பிடிக்க தடையில்லை எனவும் அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இருப்பினும் இந்த செயல் தமிழ்நாட்டு மீனவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதி இருந்தும் அதற்கு பிந்தைய காலகட்டங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி கொத்து கொத்தாக இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.  பலர் சுட்டும் கொல்லப்பட்டனர்.  அவர்களது வாழ்வாதாரமான படகுகளும் இலங்கை துறைமுகங்களிலேயே முடங்கிப்போனது.  2018-2023 வரையிலான 7 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 774 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன்,  133 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இப்படி இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள்,  2 அல்லது 3 மாத இடைவெளியில் விடுவிக்கப்பட்டு வந்தாலும், அவர்களின் படகுகள் மட்டும் இன்னும் மீட்கப்பட்டபாடில்லை.  பிடிபடும் படகுகளுக்கு இலங்கை அரசு கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதால்,  அந்த பெருந்தொகையை செலுத்தி படகுகளை மீட்க முடியாமல் உரிமையாளர்கள் திணறுகின்றனர்.

இதை சாதகமாகப் பயன்படுத்தி நீண்ட நாட்களாக மீட்கப்படாமல் இருக்கும் படகுகளை, அரசுடமையாக்குதல்,  ஏலம் விடுதல் போன்ற செயல்பாடுகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விசைப்படகின் மதிப்பு தெரியுமா?

இந்தியா-நார்வே ப்ராஜெக்டின்போது தான் இந்த விசைப்படகுகள் ராமேஸ்வரம் பகுதியில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.  புதிதாக ஒரு விசைப்படகைக் கட்ட ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும் என்பதால்,  பெரும்பாலான மீனவ மக்கள் விசைப்படகுகளை Second Hand-ஆக வாங்கி பயன்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். தரத்திற்கேற்றார்போல் அந்த படகுகளை பதிவு செய்து வாங்கவும், சுமார் 25 லட்சம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்கின்றனர் விசைப்படகு உரிமையாளர்கள்.

விசைப்படகுகளுக்கு இத்தனை முக்கியத்துவம் அளிப்பது ஏன்?

ஒரு விசைப்படகை நம்பி படகின் உரிமையாளர், மீன்பிடித் தொழிலாளர்கள், மீன் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள்,  டீசல் வாங்கி வந்து நிரப்புபவர்,  படகு ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையாளர்கள் என சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருவதால், ஒரு படகை இழப்பது 50 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என்கிறார் படகு உரிமையாளர் ஜேசுராஜா.

பல ஆண்டுகளாக உழைந்து சேமித்த பணத்தை முதலீடு செய்து,  லட்சக்கணக்கில் கடன் வாங்கியும்,  குடும்பப் பெண்களின் நகைகளை அடமானம் வைத்தும் வாங்கப்படுகிற ஒரு விசைப்படகை,  இலங்கை கடற்படையினரிடம் ஒரேயடியாகப் பறிகொடுப்பது மீனவ மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடும் என பாதிக்கப்பட்ட பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இந்த கஷ்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல், பாரம்பரியமாக செய்து வந்த மீன்பிடித் தொழிலை கைவிட்டு, அடுத்த சந்ததியினரை வேறு தொழிலில் ஈடுபடுத்த முயன்று வருவதாகவும் அவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

நடப்பாண்டில் இலங்கை கடற்படையினரிடம் சிக்கிய மீனவர்களில் 60 பேர் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,  அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்து தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மீனவ அமைப்புகள் பல்வேறுகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக ராமேஸ்வரத்திலுள்ள தங்கச்சி மடம் பகுதியில் 2 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய மீனவ அமைப்பினர், மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட 133 விசைப்படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பலகட்ட பேச்சுவார்த்தைகள், போராட்டங்களைக் கடந்தும், உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து அரங்கேறி வரும் அத்துமீறல்களை தடுக்க, நிரந்த தீர்வு எப்போது கிடைக்கும் என்பதே ஒட்டுமொத்த மீனவ மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags :
Fishermen | SriLanka | Tamil Nadu | Rameswaram | Indian Fishermen | TN Fishermen | Srilankan Navy | Fishermen Arrest |
Advertisement
Next Article