ராமர் கோயில் குறித்து வீடியோ வெளியிட்ட பாடகி சித்ரா - வலுக்கும் எதிர்ப்பு!
அயோத்தி ராமர் கோவிலுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட பாடகி சித்ராவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியுள்ளது. அவர் என்ன கூறினார்? சர்ச்சை ஏன்?.. விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். கோவில் பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள் இன்று முதல் தொடங்கி உள்ளன. இந்த பூஜைகள் வரை 22ம் தேதி மாலை வரை நடைபெற உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை தொடர்பாக பாடகி கேஎஸ் சித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது அனைவரும் ராமர் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அதேபோல் அனைவரும் வீட்டில் ஐந்து திரி தீபம் ஏற்ற வேண்டும். அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டி நான் பிரார்த்திக்கிறேன். லோக சமஸ்தா சுகினோ பவந்து என்ற சுலோகத்தோடு வீடியோ பதிவிட்டிருந்தார்.இந்த பதிவு தற்போது சர்ச்சைக்குறிய விவாத பொருளாக மாறியுள்ளது
தமிழ் , தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்பட பல மொழிப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடி புகழ் பெற்றவர் கேஎஸ் சித்ரா. மொத்தம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி காந்த குரலால் மக்களை கவர்ந்து இழுத்த கேஎஸ் சித்ராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 6 தேசிய விருதுகள் 36 திரைப்பட விருதுகள் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார். மேலும் இவர் தென்னகத்தின் நைட்டிங்கேல்' எனவும் அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது தொலைக்காட்சிகளில் வெளியாகும் நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் கேஎஸ் சித்ராவின் அயோத்தி ராமர் கோயில் குறித்த பதிவு தற்போது விவாதமாக மாறி உள்ளது. குறிப்பாக பாடகர் சூரஜ் சந்தோஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், மசூதியை இடித்து கோயில் கட்டப்பட்டு இருக்கும் வரலாற்றை மறந்துவிட்டு "லோக சமஸ்தா சுகினோ பவந்து" என கூறுவோரின் அப்பாவித்தனம் என்பது ஹைலைட்டாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அதேபோல் எழுத்தாளர் இந்து மேனன் தனது முகநூல் பக்கத்தில், இடம் பெயர்ந்தோர் மற்றும் அவர்களின் வலிகள், அவர்களின் ரத்தத்தின் மீது இருந்து மந்திரம் முழங்கினாலும் ராமனும், விஷ்ணுவும் வரப்போவது இல்லை. 5 லட்சம் விளக்குகளை ஏற்றினாலும் உங்களினம் மனதில் ஒளி என்பது வராது. குரலின் காரணமாகவே நைட்டிங்கேல் என்று உலகம் நம்பியது. ஆனால் உண்மையில் நீங்கள் ஒரு 'போலி நைட்டிங்கேல்' என கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராமர் கோயில் பிரதிஷ்டை நடத்தும் போது விளக்கேற்றி ராம நாமத்தை உச்சரிக்கவேண்டும் என்று தெரிவித்த சித்ராவிற்கு எதிராக பலரும் விமர்சிப்பதை ஏற்றுகொள்ள முடியாது என நடிகை குஷ்புவும் கேரள நடிகை கிருஷ்ண பிரியாவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு ராமர் கோயில் பற்றிய பாடகி சித்ராவின் வீடியோவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் சர்ச்சை கருத்துக்கள் எழுந்து வருகிறது.