காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்ததாக வந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஜம்முவில் மோசமான சூழ்நிலை நிலவுவதற்கு இது எடுத்துக்காட்டு. தாக்குதலில் தமிழர்கள் சிலர் பாதிக்கப்பட்டதாக தகவல் வந்த உடனேயே அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய உத்தரவிட்டேன்.
காஷ்மீர் அரசுடன் இணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய ஜனநாயகத்தில் இடமில்லை. பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மாநிலம் திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். காஷ்மீருக்கு சென்று பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் அப்தாம் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.