For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#MUDA நில முறைகேடு விவகாரம் | "விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை!" - சித்தராமையா பதிவு!

07:16 PM Sep 25, 2024 IST | Web Editor
 muda நில முறைகேடு விவகாரம்    விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை     சித்தராமையா பதிவு
Advertisement

முடா நில முறைகேடு வழக்கில், விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை, வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் ஒதுக்கியிருந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி.பிரதீப் குமார், டி.ஜே.ஆபிரகாம், மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் அளித்த மனுக்களின் பேரில், முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடுக்க, அந்த மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அனுமதி வழங்கினார்.

ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து முதலமைச்சர் சித்தராமையா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி நாக பிரசன்னா நேற்று உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில், கர்நாடக லோக் ஆயுக்தா மைசூரு மாவட்ட காவல்துறை சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : பாலியல் வன்கொடுமை புகார் – #Malayalam நடிகர் எடவேல பாபு ஜாமினில் விடுவிப்பு!

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது :

"என்னை விசாரிக்க லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நீதிமன்ற உத்தரவின் முழு நகலையும் படித்துவிட்டு விரிவாக பதில் அளிக்கிறேன். விசாரணையை எதிர்கொள்ள, சட்டப்போராட்டம் நடத்த தயாராக இருக்கிறேன். விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை. அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement