"ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு" - சௌரவ் கங்குலி கருத்து!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றது. மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது.
பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியிலிருந்து ஷுப்மன் கில் விலகியுள்ளது அணிக்கு மிகப்பெரிய இழப்பு என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது,
"ஃபார்மில் உள்ள ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஏற்பட்ட டெஸ்ட் தொடர் தோல்வி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தும் என நினைக்கவில்லை.
வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இரண்டு பிரதான சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடி பயனில்லை. முதல் இரண்டு போட்டிகளில் நிதீஷ் ரெட்டியை பயன்படுத்தலாம். அவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர். முதல் இரண்டு போட்டிகளில் அவர் அணியில் சேர்க்கப்படுவது அணி சமபலத்துடன் இருப்பதை உறுதி செய்யும்" என தெரிவித்துள்ளார்.