டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தைத் தொடங்கிய மனைவி...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா அகர்வால் வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ஆம் தேதி (21.03.2024) அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவரது வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், அவரை கைது செய்தனர். இதனை அடுத்து டெல்லி மாநில ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அமலாக்கத்துறையின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, அவர் நேற்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. ஆனால் நீதிமன்றம் ஏப்ரல் 1ஆம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டது.
முன்னதாக அமலாக்கத் துறை 250 முறை ரெய்டு நடத்தியும் ஒரு ரூபாயைக் கூட கைப்பற்றவில்லை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா அகர்வால் வீடியோ ஒன்றை வெளியிட்டு, வாட்ஸ் ஆப் எண் 8297324624-ஐ வெளியிட்டார். இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒரு பயணத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்குப் பிறகு 3 வது முறையாக காணொலியில் உரையாற்றிய, கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கூறுகையில், என்னுடைய கணவர் உண்மையான தேச பக்தர். தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் துணிச்சலாக அவர் எடுத்து வைத்தார் என்று கூறினார்.