"அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட தனது கருத்துக்களை மீண்டும் இணைக்க வேண்டும்" - ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!
"அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட தனது கருத்துக்களை மீண்டும் இணைக்க வேண்டும்" என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். குறிப்பாக, அக்னிவீரர் திட்டம், பாஜகவின் வெறுப்பு அரசியல், அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவது என பல்வேறு விவகாரங்களை அவர் மக்களவையில் எழுப்பினார்.
நீட் விவகாரம் குறித்து ராகுல் காந்தி மக்களவையில் பேசிய போது மைக் அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தவிவகாரங்களை மையப்படுத்தி மக்களவையில் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். நமது நாட்டின் மாமனிதர்கள் அகிம்சை குறித்து தான் பேசியிருக்கிறார்கள். ஆனால் இங்கே இந்துகள் என்று கூறிக்கொள்ளும் சிலரோ, வெறுப்பு, பொய் உள்ளிட்டவை குறித்துத்தான் பேசுகிறார்கள். பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்லர் என்றார்.
அதேபோல அக்னிவீரர் திட்டத்தில் பணியாற்றும் வீரர் ஒருவர் பலியானால், அவரது மரணத்தை வீர மரணமாக இந்த அரசு ஏற்காது. ஒரே ராணுவத்தில் பணியாற்றும் ஒரு வீரருக்கு அதிகப்படியான சலுகை கிடைக்கும், மற்றவருக்குக் கிடைக்காது என்றால் அது ராணுவத்துக்குள் பிளவை ஏற்படுத்தும். அக்னிவீரர் திட்டத்தில் சேர்ந்து பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது, பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் திட்டமே அக்னிவீரர்கள் திட்டம் என பல கேள்விகளை முன்வைத்திருந்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியதில் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்துக்கள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய சில பகுதிகளும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்களும் அதேபோல அக்னிவீர் மற்றும் சபாநாயகர் குறித்து பேசியதும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதை கண்டித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது..
” ஜூலை 1, 2024 அன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது எனது உரையிலிருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. எனது உரையின் கணிசமான பகுதிகள் எந்த அடிப்படையும் இன்றி வெறுமனே நீக்கப்பட்டதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.
மக்களவையில் நான் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படை யதார்த்தம் மற்றும் உண்மை நிலையாகும். மக்களவையின் ஒவ்வொரு உறுப்பினருக்கு இந்திய அரசியலமைப்பின் பிரிவு 105(1) பேச்சு சுதந்திரத்தை வழங்கியுள்ளது. மக்களவையில் மக்கள் பிரச்சனைகளை எழுப்புவது ஒவ்வொரு உறுப்பினரும் உரிமை. அந்த உரிமையையும், நாட்டு மக்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் வகையில், நேற்று நான் செயல்பட்டேன்.
நான் பேசிய கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கருத்துக்களை மீண்டும் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு ராகுல் காந்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.