For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நவாஸ் ஷரிஃப் அரசியலில் இருந்து விலகலா..? - அவரது மகள் மரியம் நவாஸ் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

10:19 AM Feb 15, 2024 IST | Web Editor
நவாஸ் ஷரிஃப் அரசியலில் இருந்து விலகலா      அவரது மகள் மரியம் நவாஸ் சொன்ன சுவாரஸ்ய தகவல்
Advertisement

நவாஸ் ஷரிஃப் அரசியலில் இருந்து விலக உள்ளதாக எழுந்த தகவல்களை அடுத்து இது தொடர்பாக நவாஸ் ஷரிஃபின் மகளான மரியம் நவாஸ் விரிவாக பேசியுள்ளார்.

Advertisement

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற 101 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

அதேபோல் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்), 75 இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களையும் முத்தஹிதா குவாமி இயக்கம் 17 இடங்களையும் கைப்பற்றின. மேலும் 17 தொகுதிகளில் மற்ற சிறிய கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைப்பதில் குழப்பம் நீடித்து வந்தது.  இதனைத் தொடர்ந்து நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி , பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்தன.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பிரதமர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும், அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று பிலாவல் பூட்டோ அறிவித்த நிலையில், நவாஸ் ஷரீஃப் தனது சகோதரரும் பாக். முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷரீஃபை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதனால் பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு பெற்று ஷெபாஸ் ஷரீஃப், பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார்.

இந்த நிலையில் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷரீஃப் பிரதமராக போட்டியிடவில்லை என அறிவித்தவுடன் அவர் அரசியலில் இருந்து முழுமையாக விலகப் போவதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் இதற்கு நவாஸ் ஷரீஃபின் மகளான மரியம் நவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

”புதிய அரசில் பிரதமர் பதவியை ஏற்க மறுத்துள்ளதால் நவாஸ் ஷரீஃப் அரசியலில் இருந்து  விலகுவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. புதிய ஆட்சி நடைபெறும் அடுத்த 5 ஆண்டுகள் நவாஸ் ஷரீஃப் மிகத் தீவிரமான அரசியலில் ஈடுபடுவார். அதுமட்டுமின்றி, மத்தியிலும், பஞ்சாப் மாகாணத்திலும் நடைபெறவிருக்கும் ஆட்சியை அவர்தான் வழிநடத்துவார்.” என மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, எந்தவொரு கூட்டணி அரசிலும் இடம் பெற மாட்டேன் என்று தேர்தல் பிரசாரத்தின்போது நவாஸ் ஷரீஃப் பேசியிருந்தார்.  நடந்து முடிந்த தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில் தனது கூற்றின்படி அவர் பிரதமராவதில் இருந்து விலகியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு அவர் சொன்ன சொல்லில் உறுதியாக இருப்பவர் என்பதும் நன்கு தெரியும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement