”சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ போல மும்பை இந்தியன்ஸ் அணியும் முடிவெடுக்கலாமே!” ஹர்திக் கேப்டன்சி குறித்து ஹர்ஷ் கோயங்கா யோசனை!
ஹர்திக் பாண்டியா கேப்டன்சி விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ போல மும்பை இந்தியன்ஸ் அணியும் முடிவெடுக்கலாமே என ஆர்ஜிபி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா யோசனை கூறியுள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5 முறை கோப்பையை வென்றுள்ளன. இரண்டு அணிகளும் பெரிய அணிகளாக கருதப்படுகின்றன. இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார்.
ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்தே பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. ரோகித் சர்மாவின் ரசிகர்கள் அணி நிர்வாகத்தின் இந்த செயலிற்கு கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து போட்டிகளின் போதும் பாண்டியாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் வருகின்றனர். இந்நிலையில், முதல் மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியையே தழுவியது. இதற்கும் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாதான் காரணம் என தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து அடுத்த இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்தது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி ரசிகர்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட MI vs CSK இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 4 விக்கெட் இழப்பிற்கு, 206 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும், ஷிவம் டுபே 66 ரன்களையும் குவித்தனர். தோனி 20 ரன்களுடனும் 20-ஆவது ஓவரை முடித்தார்.
It's disheartening to see Mumbai Indians, IPL's top franchise, get booed at home ground. Hardik Pandya seems overwhelmed balancing captaincy and performance. Yesterday Dhoni’s overwhelming presence was a disadvantage for him too.
Should MI recall Rohit Sharma as captain, like CSK… pic.twitter.com/ks38uxPtRT— Harsh Goenka (@hvgoenka) April 15, 2024
இதனைத்தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 186 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. தோனி கடைசியாக அடித்த 20 ரன்கள்தான் சிஎஸ்கே வெற்றிக்கு வழி வகுத்தது என அவரது ரசிகர்கள் தெரிவித்ததோடு, ருதுராஜும் தெரிவித்தார். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாமே என ஆர்ஜிபி எண்டர்பிரைசஸ் தலைவர் கோயங்கா யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“ஐபிஎல் தொடரின் முதன்மை அணிகளுள் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அதன் சொந்த மைதானத்தில் தோல்வியைத் தழுவியது வருத்தமளிக்கிறது. தோனியின் அபாரமான ஆட்டமும் இவர்களின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் இருந்து தோனியிடமே மீண்டும் கொடுத்தது போல் மும்பை இந்தியன்ஸ் அணியும் ரோகித் சர்மாவிடம் மீண்டும் கேப்டன் பதவியை கொடுக்கலாமே? அல்லது பாண்டியாவின் கேப்டன்ஸி மேம்படும் வகையில் நல்ல ஆலோசனை வழங்கலாமே? இவ்வாறு ஹர்ஷ் கோயங்கா யோசனை கூறியுள்ளார்.