‘இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வுக்கு ஜோதிடர் நியமனமா?’ - வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
இந்திய கால்பந்து குழு வீரர்கள் தேர்வுக்கு ஜோதிடர் நியமனமா செய்யப்பட்டுள்ளதா என சு. வெங்கடேசன் எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சரிடம், “இந்தியக் கால்பந்து குழு வீரர்களை தேர்ந்தெடுக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு, ஜோதிடர் ஒருவரின் பணியை பயன்படுத்தியுள்ளதாக வந்துள்ள செய்தி அரசுக்கு தெரியுமா?. தெரியும் எனில் விவரங்களை தாருங்கள். இப்படிப்பட்ட செயல்பாடுகள் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் கெடுத்து விடாதா?. இதுகுறித்து அரசு ஏதேனும் அறிவுரைகளை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதா?” என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், “இப்பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது; உச்சநீதிமன்ற ஆணையின்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள தடய தணிக்கை அறிக்கை வரம்பிற்குள் வரக் கூடியது. உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு சட்ட ஆலோசகர் அந்த அறிக்கையை சீல் இடப்பட்ட உறையில் தந்துள்ளார். எனவே இதுகுறித்த விவரங்களை அரசு பகிர்ந்து கொள்ள இயலாது” என்று தெரிவித்துள்ளார்.