For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு - பிரதமர் மோடி கண்டனம்!

11:06 AM May 16, 2024 IST | Web Editor
ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு   பிரதமர் மோடி கண்டனம்
Advertisement

ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஹண்ட்லோவா நகரில் நடந்த ஒரு அரசு கூட்டத்திற்குப் பின்னர் பொதுமக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். பிரதமர் ஃபிகோ மீது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் ஒரு குண்டு அவரின் அடிவயிற்றில் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஃபிகோ உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் எனவும், அவர் ஹெலிகாப்டர் மூலம் பான்ஸ்கா பைஸ்ட்ரிகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்லோவாக்கியா தலைநகர் பிராட்டிஸ்லாவாவிலிருந்து வடகிழக்கே 150 கிமீ தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 59 வயதான ஃபிகோ, கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 3வது முறையாக பிரதமர் ஆனார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் உறுப்பினராக உள்ள ஸ்லொவாக்கியா நாட்டின் பிரதமரான ஃபிகோ, ரஷியாவுக்கு ஆதரவான மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

இந்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “ராபர்ட் ஃபிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த கோழைத்தனமான மற்றும் கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ராபர்ட் விரைவில் உடல்நலம் பெற விரும்புகிறேன். ஸ்லோவாகியா நாட்டு மக்களுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement