#America -வில் துப்பாக்கிச் சூடு... 3 பேர் பலி - 8 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் மத்திய மிசிசிபி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 2024ம் ஆண்டில் மட்டும் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில், அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர அதிபருக்கான நிறைவேற்று அதிகாரம் மூலம் புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் ஹொல்மெஸ் நகரில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் அப்பகுதியை சேர்ந்த பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த நிகழ்ச்சி மத்திய மிசிசிபி பகுதியில் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின் போது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.