அதிர்ச்சி கொடுத்த #BankOfAmerica! வங்கி இருப்பு திடீரென மாயமானதால் பீதியடைந்த வாடிக்கையாளர்கள்!
பேங்க் ஆப் அமெரிக்கா-வின் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பேங்க் ஆப் அமெரிக்கா வாடிக்கையாளர்கள் பலர் இன்று (03.10.2024) தங்கள் வங்கி கணக்கில் இருந்த பணம் மொத்தமாக காணாமல் போனதால் ஆன்லைனில் ஜீரோ பேலன்ஸ் காண்பிப்பதை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகினர். மதியம் ஒரு மணி அளவில் பிரச்னை உச்சத்தை தொட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் போன்ற முக்கிய அமெரிக்க நகரங்களில் இருந்து புகார்கள் குவியத்தொடங்கின.
இதனை தொடர்ந்து பேங்க் ஆப் அமெரிக்கா வாடிக்கையாளர்கள் சமூக வலைதள பக்கங்களில் தங்கள் ஆதங்கத்தை கொட்டித்தீர்க்க ஆரம்பித்தனர். பலர் தங்கள் பணம் திருடப்பட்டதாகவோ அல்லது தொலைந்துவிட்டதாகவோ நினைத்தபோது அவர்கள் அனுபவித்த மன அழுத்தத்தைப் பற்றி பேசினர்.
அதில் ஒரு வாடிக்கையாளர் "இன்று காலை எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது, பாங்க் ஆஃப் அமெரிக்காவுக்கு நன்றி - அவர்கள் இதை நிவர்த்தி செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், வங்கியில் ஏற்பட்ட கோளாறுக்காக வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சில பயனர்கள் பாங்க் ஆஃப் அமெரிக்கா வலைத்தளத்தால் தங்கள் வங்கி இருப்பைக் காட்ட முடியவில்லை என்றாலும், எங்கள் கடன் நிலுவைத் தொகையை மட்டும் சரியாக காட்டுவதாக வருத்தம் தெரிவித்தனர்.
பாங்க் ஆஃப் அமெரிக்காவின் அறிக்கை
இதனை தொடர்ந்து பேங்க் ஆஃப் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் சிக்கலை ஒப்புக்கொண்டது. மேலும், இந்தச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வருகின்றன, சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் பிரச்னைக்கான உண்மையான காரணம் குறித்து வங்கி தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.