அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ் - அறிகுறிகள் என்ன?
கேரளாவில் 2018 இல் தொடங்கி கடந்த 2023ம் ஆண்டு வரையிலான இடைபட்ட காலங்களில் நிபா வைரஸ் வேகமாக பரவியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, கேரளாவில் கடந்த ஆண்டு மீண்டும் நிபா வைரஸ் பரவல் வேகமெடுத்தது. இந்த வைரஸ் பாதிப்பால் சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்தர். வைரஸ் பரவலை தடுக்க சுகாதாரத்துறை பல நடவெடுக்களை கையில் எடுத்தது. வைரஸ் அதிகமாக பரவிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை போட்டது.
இதையும் படியுங்கள் : பெண்ணின் உடலை பிணவறைக்கு கொண்டு செல்ல லஞ்சம் வாங்கிய ஊழியர் – கன்னியாகுமரியில் அதிர்ச்சி!
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு – கேரள எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டது. அந்த வகையில், கோவை – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வாளையார், வேலந்தாவளம், முள்ளி, மீனாட்சிபுரம், மேல்பாவி, கோபாலபுரம், வீரப்ப கவுண்டனூர், நடுப்புனி, ஜமீன்காலியாபுரம், வடக்காடு, செம்மனாம்பதி உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளில் மருத்துவ சுகாதார துறையினர் சிறப்பு தற்காலிக முகாம்களை அமைத்து 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
சுகாதாரத்துறை, மருத்துவர்கள் உள்ளிட்டோரின் தீவிர முயற்சியால் நிபா வைரல் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், கேரளாவில் மீண்டும் நிபா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் அருகே உள்ள வளஞ்சேரியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் 4 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு நிபா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது பெரிந்தல்மன்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நோயாளிகளை பராமரிப்பவர்கள் N95 மாஸ்க் அணிந்து பராமரிக்கவும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நிபா வைரஸ் என்றால் என்ன?
நிபா வைரஸ் என்பது ஜூனோடிக் வைரஸ் ஆகும்.. அதாவது இது வௌவால்கள் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது.. இது பன்றிகளைப் பாதித்து, அதன் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. இதனால் லேசான அறிகுறிகள் முதல் மூளைக்காய்ச்சல் வரை ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படலாம். நிபா வைரஸ் அசுத்தமான உணவு மூலம் மற்றவர்களுக்குப் பரவுகிறது. விலங்குகளைப் பராமரிப்போர் மற்றும் அதற்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு எளிதாக ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
அறிகுறிகள்
நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டோருக்குக் கடுமையான சுவாச பிரச்னைகள் முதல் மூளையழற்சி வரை ஏற்படும். தொடக்கத்தில் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி ஆகியவை கூட ஏற்படும். தொடர்ந்து தலைச்சுற்றல், தூக்கப் பாதிப்பு உள்ளிட்ட நரம்பியல் சார்ந்த பாதிப்புகளும் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
சில அரிய நிகழ்வுகளில் வலிப்பு கூட ஏற்படலாம். அடுத்த 2 நாட்களில் கோமாவில் விழுந்து சுவாசக் கோளாறு மற்றும் நிமோனியா பாதிப்பும் கூட ஏற்படலாம். இந்த பாதிப்புகள் 4 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை இருக்கும். சில அரிய கேஸ்களில் இது 45 நாட்கள் வரை கூட இருக்கலாம்.