“மகா விகாஸ் அகாடியை விட்டு சிவசேனா (UBT) வெளியேறாது” - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஞ்சய் ராவத்!
உத்தவ் தாக்கரே மகா விகாஸ் அகாடியை விட்டு வெளியேற மாட்டார் என சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் 288 சட்டமன்றத் தொகுதிகளில் மகாயுதி கூட்டணி 230 இடங்களை வென்று வெற்றி பெற்றது. பாஜக 132 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களையும், அஜித் பவாரின் என்சிபி 41 இடங்களையும் பெற்றன.
பெரும் பின்னடைவை சந்தித்த மகா விகாஸ் அகாடி 46 இடங்களை மட்டுமே பெற்றது. அதில் காங்கிரஸ் 16 இடங்களிலும், என்சிபி (எஸ்பி) 10 இடங்களிலும், சிவசேனா (யுபிடி) 20 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனவே மகா விகாஸ் அகாடி கூட்டணி உடைகிறது என்ற சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் உத்தவ் சிவசேனா கூட்டணியை விட்டு வெளியேறாது என அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இதுபோன்ற வதந்திகளை யாராவது கூறினால், அது அவர்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். பொதுத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றபோது, உத்தவ் சேனாவை கூட்டணியில் இருந்து பிரிக்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இப்போதுதான் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. இனி என்ன செய்வதென்று எங்களுக்கு தெரியும்.
மகாயுதி கூட்டணிக்கு முழு பெரும்பான்மை உள்ளது. ஆனால் ஏழு நாட்களுக்குப் பிறகும், மகாராஷ்டிராவுக்கு புதிய முதலமைச்சரை மகாயுதியால் வழங்க முடியவில்லை. காரணம் என்ன? ஏன் பிரதமர் மற்றும் அமித்ஷாவால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை?. பால்தாக்கரேயின் பெயரில் ஷிண்டே அரசியல் செய்கிறார். ஆனால் அவர்களின் முடிவுகள் டெல்லியில் எடுக்கப்படுகின்றன. நாங்கள் டெல்லிக்கு சென்று பிச்சை எடுத்ததில்லை” என தெரிவித்தார்.