கொச்சி அருகே கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து - 24 பேரின் நிலை என்ன?
லைபிரீயன் நாட்டுக்கு சொந்தமான 184 மீட்டர் நீளம் கொண்ட கண்டெய்னர் சரக்கு கப்பல் MSC ELSA 3, நேற்று (மே 25) விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகம் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென கப்பல் கடலில் மூழ்க தொடங்கியது. கப்பலில் இருந்த மாலுமிகள் உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் அளித்தனர்.
இதையும் படியுங்கள் : நானியின் ‘ஹிட் 3’ ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
இதன்பேரில் ராணுவ ஹெலிகாப்டர் உதவியோடு விரைந்து வந்த கடலோர காவல் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கப்பலில் மொத்தம் 24 பேர் இருந்த நிலையில் 9 பேர் லைப் ஜாக்கெட் அணிந்து கடலில் குதித்து உயிர்தப்பினர். முதற்கட்டமாக 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட சூழலில், 3 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கப்பல் கேப்டன் உட்பட 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கப்பலில் 367.1 மெட்ரிக் டன் சல்பர் எரிவாயு எண்ணெயும், 84.4 மெட்ரிக் டன் கேஸ் எண்ணெயும் ஏற்றி வரப்பட்டது. இந்த எண்ணெய் கடலில் கலந்து, மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கடலிலோ அல்லது கடற்கரையிலோ எண்ணெய் அல்லது கண்டெய்னர்களை கண்டால், பொதுமக்கள் அதனை தொடாமல், அருகே உள்ள கடலோர காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.