செல்லப் பிராணி டிட்டோவுக்கு சொத்தில் பங்கு | வெளியானது #RatanTata உயில்!
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அக்டோபர் 9ம் தேதி தனது 86-வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு டாடா அறக்கட்டளையின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதன்படி, டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ரத்தன் டாடாவின் எழுதியுள்ள உயில் விவரங்கள் வெளியாகியுள்ளன. ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட சொத்தாக சுமார் ரூ. 10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், மும்பையின் கொலாபாவில் உள்ள ஹலேகாய் வீடு, டாடா சன்ஸ் நிறுவனத்தில் உள்ள முதலீடுகள், எமரிடஸின் எஸ்டேட் போன்றவை அடங்கும்.
இதையும் படியுங்கள் : குலசை முத்தாரம்மன் தசரா திருவிழா | உண்டியல் காணிக்கையாக ரூ.4.57 கோடி செலுத்திய பக்தர்கள்!
உயிலில் தனது வளர்ப்பு நாய்க்கு ரத்தன் டாடா முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஜெர்மன் வகையை சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ரத்தன் டாடா ஆசையாக வளர்த்து வந்தார். இறப்பு வரைக்கும் தன்னுடன் இருந்த அந்த டிட்டோவுக்கும் தனது சொத்தில் ஒரு பங்கை எழுதி வைத்துள்ளார். மேலும் தனது டிட்டோ நாயை தனது சமையல்காரர் ராஜன் ஷா கவனித்துக் கொள்வார் என்றும் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, சமையல்காரர் ராஜன் ஷா, வீட்டுப் பணியாளர் சுப்பையா ஆகியோருக்கும் சொத்தில் பங்கு என்று உயிலில் ரத்தன் டாடா கூறியுள்ளார்.
அதே போல் தனது நண்பரான இளைஞர் சாந்தனு நாயுடுவுக்கு சொத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் வெளிநாட்டு கல்வி செலவையும் ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தனது அறக்கட்டளைக்கும், சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஜெஜீபோய், வீட்டு ஊழியர்கள் மற்றும் பிறருக்கும் ரத்தன் டாடா சொத்துக்களை எழுதி வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.