'கேம் சேஞ்சர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்தார். இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். ஷங்கருடன் இணைந்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இதில், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக ஏற்கனவே தயாரிப்பாளர் தில்ராஜு தெரிவித்து இருந்தார்.
இப்படம் வெளியான 15 நாட்களில் ரூ.183.79 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வரும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதிக்கு மேல் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேபோல், இப்படம் இந்தியில், ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.