"பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது?" - ராகுல் காந்தி விமர்சனம்!
பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பது வெட்கக்கேடானது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 3 ஆம் கட்ட தேர்தல் மே 7 -ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 2ம் கட்ட தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே கர்நாடகாவின் ஹசன் தொகுதி பாஜக கூட்டணி கட்சி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனான இவர் போட்டியிடும் தொகுதிக்கு கடந்த 26-ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் கூறப்பட்டதோடு, அது தொடர்பான 3000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள் : பாலஸ்தீன ஆதரவு போராட்டம் | கொலம்பியா பல்கலை. அரங்கத்தை கைப்பற்றிய மாணவர்கள் கைது!
இது தொடர்பாக மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார் .இதையடுத்து இந்த விவகாரத்தில் பிரஜ்வல் மீதும் அவரது தந்தை ரேவண்ணா மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெங்களூருவில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு அக்கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய எம்.பி பிரஜ்வால் ரேவன்னாவை மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து அக்கட்சி தலைவர் குமாரசாமி நேற்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது வெட்கக்கேடான விஷயம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது :
"நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி குறித்த விஷயங்கள் முன்பே தெரிந்தும் கூட வெறும் வாக்குகளுக்காக ஏன் பிரதமர் அமைதியாக இருக்கிறார்? கைசர்கஞ்சு முதல் கர்நாடகா வரையிலும், உன்னாவ் முதல் உத்தரகாண்ட் வரையிலும் உள்ள இந்தியாவின் மகள்களுக்கு அநியாயம் ஏற்படும் போதெல்லாம் பிரதமர் மவுனமாக இருந்து குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதை தொடர்ந்து செய்து வருகிறார். இது போன்ற குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது என்பது மோடியின் உத்தரவாதமா?"
இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது X தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.