பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம்!
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரவை நியமனக்குழு அறிவித்துள்ளது. மேலும் இவர் பிரதமரின் பதவி காலம் அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் இந்தப் பதவில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த சக்திகாந்த தாஸ், டெல்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்று பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்று, 1980 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தனது பயணத்தைத் தொடங்கினர். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார்.
தமிழ்நாடு மற்றும் மத்திய அரசுகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய இவர் மத்திய அரசுப் பணிக்குச் சென்று, நிதித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்து ரிசர்வ் வங்கி ஆளுநராக பணியாற்றினார். பொது நிர்வாகத்திற்கான அவரது பங்களிப்புகளுக்காக உத்கல் பல்கலைக்கழகத்தால் அவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் பட்டம்(D Litt) வழங்கியது.