#valparai | கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 4 பேர் கைது!
கோவை வால்பாறை அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என புகார் அளிக்கப்பட்ட நிலையில், பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மாணவிகளிடம் ஆபாசமாக பேசுதல், தவறான மெசேஜ் அனுப்புதல் உள்ளிட்ட புகார்களின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, வால்பாறையில் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் நிரந்தர பேராசிரியர்கள் இல்லை. தற்காலிக பேராசிரியர்களை கொண்டு இந்த கல்லூரி செயல்படுவதாக தெரிய வருகிறது.
இந்நிலையில், இந்த கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சமூக நலத்துறையில் இருந்து சென்றவர்களிடம் மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை தெரிவித்துள்ளனர். மகளிர் ஆணைய அதிகாரி கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொல்லை புகாரில் இரண்டு தற்காலிக பேராசிரியர்கள், ஆய்வு கூட உதவியாளர், என்சிசி பயிற்சியாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகளிடம் ஆபாசமாக பேசுதல், தவறான மெசேஜ் அனுப்புதல் உள்ளிட்ட பாலியல் புகார்கள் கூறப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வருகிறது. ஏற்கனவே கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே போன்று வால்பாறையில் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.