பாலியல் புகார் வழக்கு - மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம்!
பாலியல் புகார் வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை, இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து பல நடிகைகள் துணிச்சலாக தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளியே பேச தொடங்கினர். காவல் துறையிலும் புகார் அளித்தனர்.
அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு திரைப்பட வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து, பாலியல் ரீதியாக நடிகர் சித்திக் துன்புறுத்தியதாக பெண் ஒருவர் திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் சித்திக்கிற்கு ஜாமின் வழங்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடி இடைக்கால ஜாமின் பெற்றார்.
தொடர்ந்து இடைக்கால ஜாமின் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே அவர் தலைமறைவாக இருந்தபோது, முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி பேலா திரிவேதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
“இந்த சம்பவம் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு புகார் அளித்தவர், தான் கடந்த 2018ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கில் தனது விவகாரம் குறித்து பதிவிட்டிருப்பதாக கூறுகிறார். பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக கூறப்படும் நபர் ஹேமா கமிட்டிக்கு சென்று தனது புகாரை சொல்லவில்லை என்பதும் உண்மை.
மேலும் இத்தனை ஆண்டுகள் ஏன் அவர் மௌனமாக இருந்தார் ? ஃபேஸ்புக்கில் பதிவிட தைரியம் உள்ள அவர், ஏன் காவல்நிலையம் செல்லவில்லை? இவர் 14 பேர் மீது குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், புகாரளிக்க ஹேமா கமிட்டி முன்பு செல்ல மறுக்கிறார். எனவே தற்போதைய நிலையில் அனைத்து விவகாரத்தையும் கருத்தில் கொண்டு, சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்குகிறோம்.
சித்திக் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மேலும் விசாரணை நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைக்கும் கட்டுப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.