For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#HemaCommitteeReport | மலையாள நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் மீது பாலியல் புகார்! காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

08:08 PM Aug 25, 2024 IST | Web Editor
 hemacommitteereport   மலையாள நடிகரும் எம் எல் ஏவுமான முகேஷ் மீது பாலியல் புகார்  காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
Advertisement

மலையாள நடிகரும் கொல்லம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு வெளியான நிலையில், அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்து காங்கிரஸ் கட்சியினர் அவர் வீடு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் கமிட்டி 60க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் விசாரணை நடத்தியது.

பின்னர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஹேமா கமிஷன் அறிக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 4 வருடங்களுக்கு மேலாக இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த அறிக்கை வெளியானது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கூறப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் உள்பட எந்த விவரங்களும் இடம்பெறவில்லை. இந்த அறிக்கை வெளியானதற்கு பின்னர் பல நடிகைகள் தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர். இது மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. ``சினிமாவில் வாய்ப்பு தேடும் பெண்கள் காம்பர்மைஸ், அட்ஜஸ்ட்மென்ட் ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலைதான் உள்ளது. பாலியல் இச்சைகளுக்காக பலரும் நிர்பந்திக்கப்படுகிறார்கள். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், ப்ரோடக்‌ஷன் கன்ட்ரோலர் என யாரிடமிருந்தும் பாலியல் தொல்லைகள் ஏற்படலாம்.

நடிகைகள் தங்கும் ஹோட்டல் அறைகளின் கதவுகளை இரவு நேரத்தில் தட்டுவது சினிமாத்துறை ஆண்களின் வழக்கமாகும். இது பற்றி போலீசிடம் கூறினால் உயிருக்கு ஆபத்தாகும் நிலை உள்ளது. சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களின் பிடியில் மலையாள சினிமா உள்ளது. இவர்கள் மற்றவர்கள்மீது அதிகாரத்தைச் செலுத்தி வருகின்றனர். இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் இந்தத் துறையிலிருந்து வெளியேற்றும் அதிகாரம் படைத்த மாஃபியாவாக இவர்கள் உள்ளனர்.

இந்த பவர் குரூப்புக்கு எதிராக பேசவோ செயல்படவோ செய்தால் சினிமா துறையில் இருந்து விலக்கி வைக்கும் நிலை உள்ளது. படப்பிடிப்பு தளங்களில் மது போதையிலும் போதை பொருள்களையும் பயன்படுத்தியும் வரும் நடிகர்களால் பாலியல் அத்திமீறல்கள் அதிகமாக நடக்கிறது" என்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹேமா கமிஷன் அறிக்கையில் தனிப்பட்ட நபர்கள் குறித்து நடிகைகள் நேரடியாக வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், தகவல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்குமூலம் அளித்த நபர்களின் பெயர்களோ, குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெயரோ வெளியிடப்படவில்லை. ஆனாலும், ஹேமா கமிஷன் அறிக்கை குறித்த விவாதத்தில் சிலரது பெயர்கள் வெளிப்பட்டு வருகின்றன.

இதனால் கேரள திரையுலகில் மட்டுமல்லாது அம்மாநில அரசியலிலும் புயல் வீசத்தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் 2019-ஆம் ஆண்டே கேரள சினிமா துறையில் நடக்கும் பாலியல் அத்து மீறல்கள் குறித்து ஹேமா கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது குறித்து நடவடிக்கை எடுக்காததோடு அறிக்கையையும் கேரள அரசு வெளியிடாமல் மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், மலையாள நடிகரும் கொல்லம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த 2018 ம் ஆண்டு ஹோட்டலில் தங்கி இருந்த நடிகையை தொடர்ந்து அழைத்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதனால் முகேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரியும் கேரள மாநில இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

Tags :
Advertisement