#Choreographer ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் - ஜனசேனா கட்சியிலிருந்து நீக்கம்!
பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கட்சியிலிருந்து பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி அதிரடியாக நீக்கியுள்ளது.
சமீபத்தில் 2022ம் வருட திரைப்படத்திற்கான விருதினை மத்திய அரசு அறிவித்தது. இதில் சிறந்த நடன இயக்குநராக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் அறிவிக்கப்பட்டார். இவர் தெலுங்கில் அலா வைகுண்டபுரமுலோ திரைப்படத்தில் இடம்பெற்ற புட்டா பொம்மா பாடலின் மூலம் கவனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருந்தார்.
இந்த நிலையில் ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருக்கும் இளம்பெண் ஒருவர் பிரபல நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது விசாரித்த காவல்துறை நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடன இயக்குனர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடன கலைஞர் புகார் அளித்திருப்பது தெலுங்கு திரைப்பட துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். தற்போது இவர் மீது பாலியல் புகார் எழுந்ததோடு, போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜன சேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..
"ஜன சேனா கட்சி பணிகளில் இருந்து ஜானி மாஸ்டர் ஒதுங்கி இருக்க வேண்டும். அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.